மாணவர்களை காப்பாற்ற வேண்டியது நீதிமன்றத்தின் கடமை-ஐகோர்ட்

by Staff / 15-10-2023 04:24:32pm
மாணவர்களை காப்பாற்ற வேண்டியது நீதிமன்றத்தின் கடமை-ஐகோர்ட்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எட்டாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு, 14 வயதுக்குள் இருக்க வேண்டும் என்ற விதியைச் சுட்டிக்காட்டி, 14 வயது இரண்டு மாதங்களான, ஷ்ரேயா என்ற மாணவிக்கு தாம்பரம் விமான படை வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா சேர்க்கை வழங்க மறுத்தது.இதை எதிர்த்து, விமானப்படை அதிகாரியின் மகளான ஷ்ரேயா தாக்கல் செய்த வழக்கை நீதிபதி சேஷஷாயி விசாரித்தார்.கேந்திரிய வித்யாலயா நிர்வாகம் தரப்பில், மாணவர் சேர்க்கைக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது நிர்வாகத்தின் முடிவு என்பதால், நீதிமன்றம் தலையிட முடியாது எனவும், மாணவி 30 கிலோ மீட்டர் பயணித்து வேறு பள்ளியில் படிக்கிறார் என்பதற்காக விதிகளை தளர்த்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, மாணவர் சேர்க்கை விதிகள், கற்களில் பொறிக்கப்பட்ட ஆணை எனவும் அதற்கு வளைந்து கொடுக்கும் தன்மை இல்லை எனவும் கருத வேண்டுமா? இந்த விதிகள் சாலமனின் 10 கட்டளைகள் எனக் கூற முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.இது போன்ற விதிகளால் நாடு முழுவதும் பல மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி,தேசத்தின் சொத்தான மாணவர்களை காப்பாற்ற வேண்டியது நீதிமன்றத்தின் கடமை என தெரிவித்துள்ள நீதிபதி, மாணவிக்கு எட்டாம் வகுப்புக்கான சேர்க்கை அளிக்க கேந்திரிய வித்யாலயா பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via