மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நாளை துவக்கம்

by Editor / 23-08-2021 04:59:56pm
மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நாளை துவக்கம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திற னாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நாளை துவங்குகிறது. இந்த போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் உள்பட இந்தியாவிலிருந்து 54 பேர் பங்கேற்கிறார்கள்.

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தவுடன் பாராலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும். மாற்றுத்திறனாளிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் விதமாக நடத்தப்படுகிறது. கடந்த 1948 ஒலிம்பிக் போட்டியில் அதிகளவு மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர். அதற்கு அடுத்து 1960-இல் 23 நாடுகளில் இருந்து 400-க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். இதன் தொடர்ச்சியாக 2012 லண்டன் ஒலிம்பிக்கில் 100 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கோனர் பங்கேற்றனர்.ஒவ்வொரு மாற்றுத்திறனாளியின் உடல்பாதிப்புக்கு ஏற்ப அவர்கள் விளையாட்டுகள் வகைப்படுத்தப் பட்டுள்ளன. கடந்த 2020-ஆம் ஆண்டே பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக ஒலிம்பிக் போட்டிகளைப் போலவே பாராலிம்பிக் போட்டியும் ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. டோக்கியோவில் ஏற்கெனவே 1964-இல் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. அதன்பின் 2வது முறையாக தற்போது நடைபெறுகிறது.

வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், சைக்கிளிங், குதிரையேற்றம், 5 போ் கால்பந்து, கோல்பால், ஜூடோ, பாராகனோ, பவர்லிஃப்டிங், ரோயிங், துப்பாக்கி சுடுதல், சிட்டிங் வாலிபால், நீச்சல், டேபிள் டென்னிஸ், வீல்சேர் கூடைப்பந்து, வாள்சண்டை, ரக்பி, டென்னிஸ் உள்ளிட்ட 22 விளையாட்டுகளில் 540 போட்டிகள் நடக்க உள்ளன.தமிழக வீரர் மாரியப்பன்

பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவிலிருந்து 54 பேர் பங்கேற்கிறார்கள். இந்திய தேசியக் கொடியை ஏந்தி செல்லும் கவுரவும், 2016-இல் ரியோ டி ஜெனிரோவில் தங்கம் வென்ற தமிழக தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பாரா ஒலிம்பிக் தொடரில் இந்திய கொடியை ஏந்தப் போகும் முதல் தமிழக வீரர் என்ற சிறப்பை இதன் மூலம் மாரியப்பன் தங்கவேலு பெற்றிருக்கிறார். கடந்த 2016 ரியோ பாராலிம்பிக்கில் 2 தங்கம், தலா 1 வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை இந்திய அணியினர் வென்றிருந்தனர். டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் பதக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

 

Tags :

Share via