குரு பகவானின் அருள் நிறைந்த புளியரை சதாசிவமூர்த்தி திருக்கோயில்

by Editor / 27-09-2021 08:09:26pm
குரு பகவானின் அருள் நிறைந்த புளியரை சதாசிவமூர்த்தி திருக்கோயில்

 

தென்காசி அருகே உள்ள புளியரை சதாசிவ மூர்த்தி திருக்கோயிலில் சதாசிவமூர்த்தி எனும் சிவ லிங்கம் மூலவராக இருந்தாலும், மூலவருக்கும் நந்திக்கும் இடையே அமைதிருக்கும் தட்சிணாமூர்த்திக்கே சிறப்பு வாய்ந்த தலமாக பார்க்கப்படுகின்றது.
சுவாமிகளின் தகவல்:
மூலவர் - சதாசிவ மூர்த்தி
அம்மன் / தாயார் - சிவகாமி
உற்சவர் - சதாசிவம்
தல விருட்சம் - புளியமரம்
தீர்த்தம் - சடா மகுடம்


இடம் - புளியரை, தென்காசி, திருநெல்வேலி.இங்குள்ள மூலவர் சதாசிவ மூர்த்தி சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கின்றார். பொதுவாக சிவன் கோயிலில் தட்சிண மூர்த்தி, தெற்கு திசை பார்த்து அமர்ந்திருப்பார். ஆனால் இங்கு மூலவர் சதாசிவ மூர்த்தி லிங்கத்திற்கும், வாசலில் உள்ள நந்திக்கும் இடையே தெட்சிணா மூர்த்தி அருள்பாலிக்கின்றார்.
சிவ லிங்கத்தின் பின் திசையில் நவநீத கோபால், சுற்றுப் பிரகாரத்தில் சதாசிவ மூர்த்ஹ்தி, சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர், முருகன், பைரவர், நாகர், சந்திரன் மற்றும் சப்தகன்னிகள் சன்னதிகள் உள்ளன்.
இந்த கோயிலில் திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் வேண்டி, கல்வி, வேலை, தொழில் ஆகியவை சிறக்க, நாக தோஷம் நீங்க நட்சத்திர தினத்தில் வேண்டிக்கொள்ளலாம்.


வேண்டுதல் பலித்த உடன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அர்ச்சனை, வஸ்திரம் சாத்தி பூஜை செய்து வழிபடலாம்.
தட்சிணாமூர்த்திக்கு முல்லைப் பூ மாலை, கொண்டைக்கடலை மாலை சாத்தி, தயிர்சாதம் நைவேத்யம் படைக்கலாம். சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றப்படுகிறது.கோயிலுக்கு செல்ல 27 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 27 படிக்கட்டுகள் 27 நட்சத்திரங்களாகப் பார்க்கப்படுகின்றது. நட்சத்திர தோஷம் உள்ளவர்கல் இங்கு வந்து 27 படிகள் வழியாக ஏறி சிவனை பூஜித்தால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.


புளிய மரத்தடியில் சிவன் காட்சி அளித்ததால் புளியரை என அழைக்கப்பட்டது. இந்த ஊர் சின்ன சிருங்கேரி என்ற சிறப்பையும் பெற்றது.சிவ தலமாக இருந்தாலும், தட்சிணாமூர்த்திக்கே உரிய ஆலயம் என்பது போல் அதிக சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றது. வியாழக்கிழமைகளிலும், குரு பெயர்ச்சியின் போதும் அதிகளவில் பக்தர் கூட்டம் வந்து செல்கின்றனர்.
இங்குள்ள அம்மன் சிதம்பரத்திலிருந்து கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுவதால் சிவகாமி என அழைக்கப்படுகின்றாள்.சமண மதம் மேலோங்கி இருந்த காலத்தில் சிதம்பரம் நடராஜர் கோயிலும் அவர்களின் ஆளுமையின் கீழ் வந்தது. அப்போது சிவ பக்தர்கள் நடராஜர் சிலையை எடுத்து தெற்கு பகுதிக்கு வந்தனர். புளியமரங்களால் நிறைந்த காட்டுப்பகுதியை அடைந்தனர். சுவாமி சிலையை ஒரு புளியமர பொந்தில் மறைத்து வைத்தனர்.


புளியமரத்தின் உரிமையாளரின் கண்ணில் அந்த சிலை பட்டது. ஈசனின் பக்தரான அவர் அங்கேயே வைத்து வணங்கி வந்தார்.
சில காலங்களில் சிவ பக்தர்கள் அங்கு வந்து சிலையை மீண்டும் எடுத்துச் சென்றுவிட்டனர். புளியமர உரிமையாளர் அங்கு நடராஜரை வணங்க வந்த போது சிலை இல்லாததால் வருந்தி, சிவ பெருமானை வணங்கி மீண்டும் இங்கு காட்சி அளிக்க வேண்டும் என்றார்.

உடனே ஈசன் சுயம்பு வடிவமாக தோன்றி காட்சி அளித்தார். இவரை சதாசிவம் என அழைத்தார். இந்த தகவலை அறிந்த அப்பகுதி மன்னன் கோயில் கட்டி வழிபட்டார் .

 

Tags :

Share via