பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கருக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவின் தலைமைச் செயல் அதிகாரி நிக் ஹாக்லி அறிக்கை 

by Editor / 18-08-2021 07:48:46pm
 பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கருக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவின் தலைமைச் செயல் அதிகாரி நிக் ஹாக்லி அறிக்கை 

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேசம் அணிகளுக்கு எதிரான டி20 தொடரிலும் ஆஸ்திரேலிய அணி தோற்றுள்ளது. இதனால் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. டி20 தொடரை வங்கதேச வீரர்கள் கொண்டாடியதன் விடியோவை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்தது. இதுதொடர்பாக கிரிக்கெட் ஆஸ்திரேலிய ஊழியரிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தில் லேங்கரின் பெயரும் அடிபட்டது. இதனால் லேங்கரின் பதவிக்கு ஆபத்து எழுந்துள்ளதாகத் தகவல் பரவியது. இந்நிலையில் லேங்கருக்கு ஆதரவளித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமைச் செயல் அதிகாரி நிக் ஹாக்லி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

2018-ல் பதவிக்கு வந்தது முதல் ஆஸி. அணியின் செயல்பாடுகளிலும் நடவடிக்கைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார் லேங்கர். இதனால் ஆஸி. அணியின் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது. அனைத்து ஆஸ்திரேலிய மக்களும் பெருமைப்படும் விதத்தில் ஆஸி. அணி உள்ளது.

2022 ஜூன் வரை லேங்கருக்கு ஒப்பந்தம் உள்ளது. எனவே வெற்றிகரமான டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் தொடர்களில் தான் எங்களுடைய கவனம் உள்ளது. ஆஷஸ் தொடரை அனைவரும் மிகவும் எதிர்பார்க்கிறார்கள். கடந்த 18 மாதங்களாக சவாலான காலகட்டமாக உள்ளது. அப்படி இருந்தும் அனைத்து வீரர்களும் விளையாடியபோது டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் சிறப்பான வெற்றிகளை ஆஸி. அணி பெற்றுள்ளது. ஜஸ்டின், அவருடன் இணைந்து பணியாற்றும் பயிற்சியாளர்கள், அணியில் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ள வீரர்கள் என அனைவருக்கும் அடுத்து வரும் போட்டிகளில் வெற்றிகளை அடைய முக்கியப் பங்கு உள்ளது என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via