2026 தேர்தலை கருத்தில்கொண்டு மண்டலம் வாரியாக குழுக்கள் அமைத்த திமுக.

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை தீவிரப்படுத்தும் வகையில்,அனைத்துக்கட்சிகளும் தயாராகிவருகின்றன.இதில் ஒருபடி மேலே போய் திமுக ஆட்டத்தை ஏற்கனவே தொடங்கிவிட்டது.இதன் ஒருபகுதியாக திமுகவில் 7 மண்டலச் செயலாளர்களை கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளார்.
2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெறும் வகையில், தேர்தல் பணிகளை திமுக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு, இந்தக் குழுவின் பரிந்துரை அடிப்படையில், கட்சி நிர்வாக ரீதியான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த சட்டமன்றத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதேபோல, இந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் மண்டல பொறுப்பாளர்களை கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொகுதி பார்வையாளர்களின் பணிகளை கண்காணிப்பது, அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவது ஆகிய பணிகளில் மண்டலச்செயலாளர்கள் ஈடுபட உள்ளனர்.இதன்படி, 7 மண்டலங்களாக பிரித்து செயலாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.
தூத்துக்குடி, குமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல செயலாளராக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி நியமிக்கப்பட உள்ளார். திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை உள்ளடக்கிய மத்திய மண்டலத்தின் செயலாளராக அமைச்சர் கே.என்.நேரு நியமிக்கப்படஉள்ளார்.
திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்துக்கு அமைச்சர் எ.வ.வேலுவும், கொங்கு மண்டலத்தில் கரூர், கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல, கொங்கு மண்டலத்தில் உள்ள சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை அமைச்சர் சக்கரபாணி கவனிக்க உள்ளார். திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்துக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவும், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்துக்கு துணை பொதுச் செயலாளர் ஆ.ராசாவும் நியமிக்கப்பட உள்ளனர்.
மண்டல செயலாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மண்டல செயலாளராக நியமிக்கப்பட உள்ளவர்கள் ஏற்கனவே சந்தித்து தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மண்டலச் செயலாளராக நியமிக்கப்பட உள்ளவர்கள், ஏற்கனவே தங்களது பணிகளைத் தொடங்கி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
வரும் ஒன்றாம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இதற்கு தயாராகும் வகையிலும், நான்காண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டங்கள், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகங்களை மண்டலச் செயலாளர்கள் இணைந்து வெளியிட உள்ளனர்.
Tags : 2026 தேர்தலை கருத்தில்கொண்டு மண்டலம் வாரியாக குழுக்கள் அமைத்த திமுக.