சூறைக்காற்றால் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்ட வாழைகள் சேதம்.
குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதைத் தொடர்ந்து சூறைக்காற்றுடன் ஓரிரு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.இதையொட்டி விவசாயம் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. குறிப்பாக நாஞ்சில் நாட்டுப்பகுதியான தோவாளை தாலுகா பகுதியில் பிரதானமாக வாழை சாகுபடி பெருமளவில் செய்யப்பட்டு வருகிறது.
அருமநல்லூர், சிறமடம்,ஞாலம், கொக்கால் விளாகம், அழகியபாண்டியபுரம், திடல், ஈசாந்திமங்கலம், தெள்ளாந்தி உள்ளிட்ட பகுதிகளில் 350 ஹெக்டேர் பரப்பளவில் வாழை விவசாயம் நடக்கிறது.இந்நிலையில் மழையுடன் வீசிய காற்றினால் ஞாலம், அந்தபுரம், திடல், அழகியபாண்டியபுரம், தெரிசனங்கோப்பு, ஈசாந்திமங்கலம், தெள்ளாந்தி உள்ளிட்ட பல இடங்களில் வாழைகள் முற்றிலுமாய் சரிந்து சேதமாகின.
ஒரு ஏக்கருக்கு 1000 வீதம் வாழைகள் நடப்படும் நிலையில் கடந்த 7 மாத காலங்களில் இதன் பராமரிப்பு செலவு ஏக்கருக்கு ரூ.2லட்சத்தை தாண்டும்.வளர்ந்து பயன் தரும் பருவத்தில் பயனின்றி முறிந்து விழுந்த நிலையில் இதனை பயிரிட்ட விவசாயிகள் வேதனையின் விளிம்பில் உள்ளனர்.மாவட்ட நிர்வாகம் தரப்பில் சேதம் குறித்த கணக்கெடுப்பு மேற்கொண்டு வருகிறது.
Tags : சூறைக்காற்றால் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்ட வாழைகள் சேதம்.



















