என்னம்மா இப்படி பண்றீங்களே! புகார் அளிக்க சென்ற இளைஞர்களை அலைக்கழித்த போலீஸார்... பிறகு நடந்த அதிரடி!

by Admin / 26-08-2021 02:50:30pm
என்னம்மா இப்படி பண்றீங்களே! புகார் அளிக்க சென்ற இளைஞர்களை அலைக்கழித்த போலீஸார்... பிறகு நடந்த அதிரடி!

சென்னையில் கத்தியைக் காட்டி மிரட்டி இளைஞரிடம் நகை மற்றும் செல்போன் பறிப்பு சம்பவம் நடைபெற்ற நிலையில், அது குறித்து புகார் அளிக்கச் சென்ற இளைஞரிடம் தங்களது காவல் நிலைய எல்லை இல்லை எனக்கூறி போலீசார் அலைகழித்துள்ளனர்.  
 
சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் மயிலாப்பூர் ஆர்.கே சாலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் கஞ்சா போதையில் வந்த இருவர் திடீரென தங்கள் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து மோகன் ராஜை மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த 1 சவரன் தங்கச் செயின் மற்றும் செல்போனை பறித்துவிட்டு அவரின் வாகனத்தையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

இதனையடுத்து மோகன்ராஜ் இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றார். அப்போது சம்பவம் நடந்த இடம் ராயப்பேட்டை காவல் நிலைய எல்லையில் இருப்பதாகக் கூறி புகாரை பெறாமல் மோகன்ராஜை போலீசார் அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மோகன்ராஜ் ராயப்பேட்டை காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்றபோது அங்கும் மயிலாப்பூர் காவல் நிலைய எல்லை எனக்கூறி அனுப்பி வைத்தனர். இதேபோல் மோகன்ராஜ் 4 முறை அலைந்து புகாரே வேண்டாம் என மனமுடைந்து வீட்டிற்கு சென்றுள்ளார்.



இந்நிலையில் பாதிக்கப்பட்ட மோகன்ராஜை போலீசார் அலைக்கழித்த தகவல் கிழக்கு மண்டல இணை ஆணையர் ராஜேந்திரனுக்கு தெரியவர உடனடியாக புகாரை பெறும்படி உதவி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார் இணை ஆணையர் ராஜேந்திரன். அதன் அடிப்படையில் மயிலாப்பூர் போலீசார் உடனடியாக மோகன்ராஜின் வீட்டிற்குச் சென்று அவரிடம் புகாரைப் பெற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பவம் நடந்த ஆர்.கே சாலையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். கொள்ளையனின் முக அடையாளங்கள் தெரியக்கூடிய அனைத்து சி.சி.டி.வி காட்சிகளையும் தொடர்ச்சியாக ஆய்வு செய்தனர். அந்த காட்சிகளின் அடிப்படையில் பள்ளிக்கரணை பகுதிக்கு கொள்ளையர்கள் சென்றதை போலீசார் கண்டுபிடித்து, பதிவான அடையாளங்களை வைத்து பள்ளிக்கரணையில் பதுங்கி இருந்த இரு கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
 
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் வழிப்பறிச் சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் பள்ளிக்கரணை நன்மங்கலம் பகுதியைச் சேர்ந்த ஜீவானந்த்(22) மற்றும் மேடவாக்கத்தைச் சேர்ந்த மாணிக்கம்(24) என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் இருவரும் அன்னை சத்யா நகர் பகுதியில் கஞ்சா வாங்கி அடித்துவிட்டு மயிலாப்பூர் வழியாக செல்லும்போது மோகன்ராஜிடம் நகை, செல்போன் ஆகியவற்றை பறித்துவிட்டு சென்றதும் தெரியவந்தது.

அதுமட்டுமல்லாமல் ஏற்கெனவே ஜீவானந்த் மீது அடிதடி வழக்கு நிலுவையில் இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. குறிப்பாக 60 சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்களை கைது செய்த நிலையில் கைது செய்யப்பட்ட இரண்டு கொள்ளையர்களையும் மயிலாப்பூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் புகார் அளிக்க வந்த மோகன்ராஜை எல்லைக் காரணம் கூறி அலைக்கழித்த காவல்துறையினர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via