பெண் இன்ஸ்பெக்டரின் அராஜகம்... வியாபாரியிடம் பணத்தை அபகரித்து மோசடி...

by Admin / 27-08-2021 03:40:43pm
பெண் இன்ஸ்பெக்டரின் அராஜகம்... வியாபாரியிடம் பணத்தை அபகரித்து மோசடி...

தலைமறைவானவரை கைது செய்த போலீசார்.
மதுரையில் 10லட்சம் மோசடி வழக்கில்  தலைமறைவாக இருந்து வந்த பெண் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி இந்திரா நகரைச் சேர்ந்த கொங்கன் மகன் அர்ஷத்(32) இவர் வில்லாபுரத்தில் உள்ள பேக் தயாரிக்கும் நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சொந்தமாக தொழில் தொடங்க திட்டமிட்ட அர்ஷத் பேக் தயாரிக்க தேவையான மெஷின்கள் வாங்க ரூ.10 லட்சத்தை ஒரு பையில் எடுத்துக் கொண்டு இளையான்குடியில் இருந்து காரில் திருமங்கலத்தை சேர்ந்த பாண்டி என்பவரிடம் வட்டிக்கு பணம் வாங்குவதற்காக நாகமலை புதுக்கோட்டை தேனி மெயின் ரோட்டில் உள்ள லாட்ஜ் அருகில் காத்திருக்கும் போது  பாண்டியின் நண்பர் கார்த்திக், வயதான நபர் ஒருவர் வந்துள்ளனர்.

அவர்கள் மூன்று பேரும் பணத்திற்க்கு தேவையான ஆவனங்களை எடுத்து வருவதாக கூறி அரை மணி நேரம் கழித்து வந்து அர்ஷத் உடன் காரில் ஏறியுள்ளனர்.

அப்போது திடீரென அங்கு  காவல்துறை வாகனத்தில் வந்த நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் இன்ஸ்பெக்டரின்  டிரைவர் ஆகியோர் இறங்கி வந்து அர்ஷத் கையில் பணம்  வைத்திருந்த பையை கேட்டுள்ளனர். அந்த பையை கார்த்திக் அர்ஷத் இடமிருந்து பிடுங்கி இன்ஸ்பெக்டரிடம் கொடுத்துள்ளார்.

பின்னர் அவர்கள் அனைவரையும் காவல்துறை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சிறிது தூரம் சென்று அவர்களை வழியில் இறக்கிவிட்டு விட்டு இங்கிருந்து ஓடி விடுங்கள் என கூறியுள்ளார் அதற்கு அர்ஷத் இன்ஸ்பெக்டரிடம் என்னுடைய பையில் 10 லட்சம் உள்ளது என கூறியுள்ளார்.

அதற்கு இன்ஸ்பெக்டர் வசந்தி மறுநாள் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு கூறி அவர்களை அனுப்பி வைத்துள்ளார்.
 
மறுநாள் அர்ஷத்  நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையம் வந்து இன்ஸ்பெக்டரிடம் பணத்தை கேட்டுள்ளார்.

அதற்கு இன்ஸ்பெக்டர் பணம் இல்லை எனக்கூறி, நீங்கள் இங்கிருந்து ஓடிவிடுங்கள்.  மறுபடியும் பணம் கேட்டு வந்தால் கஞ்சா வழக்கு பதிவு செய்து சிறையில் தள்ளிவிடுவேன் என கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து அர்ஷத் மதுரை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வசந்தி, தேனியை சேர்ந்த பால்பாண்டி, குண்டு பாண்டி, சிலைமானை சேர்ந்த உக்கிரபாண்டி,கார்த்திக் ஆகியோர் மீது  நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு உள்ள சூழ்நிலையில் பெண் காவல் ஆய்வாளர் மட்டும் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் இவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via