காங்கிரஸ் ஆட்சி கவிழுமா...? சத்தீஸ்கரில் உட்கட்சி மோதல் தீவிரம்...
சத்தீஸ்கரில் முதலமைச்சர் பூபேஷ் பாகேலுக்கும், மூத்த அமைச்சருக்கும் இடையே முதல்வர் பதவியை பிடிப்பதில் கடும் மோதல் நிலவுவதால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்ககள் டெல்லி வரும்படி சோனியாகாந்தி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் மூத்த தலைவர் பூபேஷ் பாகேல் சத்தீஸ்கர் முதலமைச்சராக, கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பதவியேற்றார். தற்போது இரண்டரை ஆண்டுகள் முடிந்த நிலையில் ஏற்கனவே உறுதி அளித்தபடி சுழற்சி முறையில் முதல்வர் பதவியை தனக்கு வழங்கும்படி சுகாதார துறை அமைச்சர் டி.எஸ்.சிங் தியோ போர்க்கொடி உயர்த்தியுள்ளார். இதனால் அவரை ஓரம்கட்டும் முயற்சியில் பூபேஷ் பாகேல் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் முதலமைச்சருக்கும், சிங் தியோவுக்கும் இடையே உரசல் முற்றியது. இதைத் தொடர்ந்து சிங் தியோ டெல்லி சென்று காங்கிரஸ், தலைவர் சோனியாவை சந்தித்து சுழற்சி முறை முதல்வர் கோரிக்கையை வலியுறுத்தினார்.இதையடுத்து பூபேஷ் பாகேல் டெல்லி சென்று சோனியாவை சந்தித்து பேசி விட்டு, சத்தீஸ்கர் திரும்பினார்.
பூபேஷ் பாகேல் ராய்பூர் திரும்பி விட்ட போதிலும் சிங் தியோ இன்னும் டெல்லியில் முகாமிட்டு உள்ளார்.
இதற்கிடையே சத்தீஸ்கர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் டெல்லி வரும்படி கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சத்தீஸ்கரில் காங்கிரஸ் அரசு கவிழுமோ என்ற பரபப்பு நிலவுகிறது.
ஆனால், இந்த தகவலை மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பிஎல் புனியா மறுத்துள்ளார். முதல்வர் பூபேஷ் பாகல், டெல்லியில் ராகுல் காந்தியை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், அவர் இன்று ராகுல் காந்தியை சந்திக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள புனியா, மற்ற எம்எல்ஏக்களை கட்சி தலைமை அழைக்கவில்லை என தெரிவித்துள்ளார்
Tags :