ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீ ஆண்டாள் திருக்கோவிலில் ஆடிப்பூர தேர்த்திருவிழா.

by Editor / 28-07-2025 09:46:07am
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீ ஆண்டாள் திருக்கோவிலில் ஆடிப்பூர தேர்த்திருவிழா.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தர் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர விழா கடந்த 20  ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்று பெயர் பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர்.கோதையாகிய ஸ்ரீ ஆண்டாள் பிறந்த ஊராகிய இந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்புரம் விழா மிக முக்கியமான நிகழச்சியாகும்.முதல் திருநாளான அன்று இரவு 16 சக்கர வாகனத்தில் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னார் பவனி நடைபெற்றது, 5 ஆம் திருநாளான கடந்த 24 ஆம் தேதி ஐந்து கருட சேவையும் 7ஆம் திருநாளான கடந்த 26 ஆம் தேதி சயன சேவையும் நடைபெற்றது.இந்நிலையில் 9 ஆம் திருநாளன ஆடிப்பூர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்புர தேரோட்டம் இன்று நடை பெற்றது.திரு ஆடிப்பூர தேர்த் திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.அடிப்பூரம் எனபடுவது ஸ்ரீ ஆண்டாள் பிறந்த நட்சத்திரமாகும் இந்நாளில் நடைபெறும் இந்த தேரோட்டத்தில் பங்கேற்று ஸ்ரீ ஆண்டாள்,ஸ்ரீ ரெங்கமன்னாரை தரிசனம் செய்தால் வாழ்வில் எல்லா நலன்களும் பெறலாம். மேலும் திருமணம் ஆகாத பெண்கள், ஆண்கள், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் தேரை வடம் பிடித்து இழுத்தால் அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். இதற்க்கு முன்னதாக இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஸ்ரீ ஆண்டாள், ரெங்கமன்னார் உற்ஸவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மதுரை கள்ளழகர் சூடிக்கழைத்த வஸ்த்திரத்தை  உடுத்தி திருத்தேரில் எழுந்தருளச் செய்தனர்.தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள் "கோவிந்தா கோவிந்த" என்ற கோஷத்துடன் வடம் பிடித்து நான்கு ரத வீதிகளின் வழியாக தேரை இழுத்தனர். இன்று விருதுநகர் மாவட்டம்  உள்ளுர் விடுமுறை என்பதால் பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் குவிந்தனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக 2000 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

 

Tags : Aadipura chariot festival at Sri Andal Temple in Srivilliputhur.

Share via