திருவாரூர் தண்ணீர் இன்றி 10ஆயிரம் ஏக்கர் குறுவை நெல் பயிர்கள் கருகும் அபாயம்.

by Editor / 28-07-2025 09:58:25am
திருவாரூர் தண்ணீர் இன்றி 10ஆயிரம் ஏக்கர் குறுவை நெல் பயிர்கள் கருகும் அபாயம்.

திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தற்பொழுது விதை தெளித்து 40 நாட்கள் ஆன நிலையில் நெல் பயிர்களுக்கு உரம் அடிக்க வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர்.இந்த நிலையில் திருவாரூர் அருகே பாண்டவையாறு பாசனத்தை நம்பி சுமார் 10 கிராம விவசாயிகள் 10,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

குறிப்பாக மாங்குடி, கீழமணலி, கூத்தங்குடி, சேந்தனாங்குடி, உழனி, தப்ளாம்புலியூர்,வாஞ்சியூர் உள்ளிட்ட கிராமங்களில் குறுவை சாகுபடி செய்து 40 நாட்கள் ஆன நிலையில் தற்போது நெல் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருகிறது. குறிப்பாக பாண்டவையாறு பாசனத்தை நம்பி விவசாயிகள் சாகுபடி செய்துவரும் நிலையில் ஆற்றில் தரையோடு தரையாக தண்ணீர் செல்வதால் ஆற்றில் இருந்து பிரியக்கூடிய சிறு குறு வாய்க்கால்களுக்கு தண்ணீர் வராத காரணத்தினால் தற்பொழுது நெல் பயிர்களுக்கு தண்ணீர் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 

ஒரு ஏக்கருக்கு பத்தாயிரம் ரூபாய் செலவு செய்துள்ள நிலையில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் பொருளாதார இழப்பை சந்திக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் குறுவை சாகுபடி முற்றிலும் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.உடனடியாக மாவட்ட ஆட்சியர் பொதுப்பணித்துறை அதிகாரிகளை அனுப்பி முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே குறுவை நெல் சாகுபடி பயிர்களை காப்பாற்ற முடியும் இல்லையென்றால் முற்றிலுமாக நெல் பயிர்கள் பாதிக்கக்கூடும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 

Tags : Without water in Thiruvarur, 10,000 acres of Kuruvai paddy crops are at risk of scorching.

Share via