மதுரை மேம்பால விபத்து குறித்து நேரில் ஆய்வு... 10 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்..
மதுரை மேம்பால விபத்து குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்ட திருச்சி என்.ஐ.டி பேராசிரியர் பாஸ்கரன் 10 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மதுரை புதுநத்தம் சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் தூண் கடந்த 28-ஆம் தேதி திடீரென இடிந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விபத்திற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருந்த நிலையில், இன்று திருச்சி என்.ஐ.டி பேராசிரியர் பாஸ்கரன் தலைமையிலான குழு நேரில் ஆய்வு மேற்கொண்டது.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பேராசிரியர் பாஸ்கரன், விபத்து குறித்து முதற்கட்ட ஆய்வினை மேற்கொண்டுள்ளதாகவும், வரும் 4ஆம் தேதி திருவனந்தபுரம் மற்றும் டெல்லியை சேர்ந்த வல்லுனர்கள் நேரில் வந்து ஆய்வில் ஈடுபட உள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும், விபத்து ஏற்படுவதற்கு ஹைட்ராலிக் ஜாக்கி கருவி தான் காரணம் என கூறப்படும் நிலையில், அதன் தரம் குறித்தும் ஆய்வு செய்ய உள்ளதாக கூறினார்.
Tags :