தாடியில்லா பெரியார் ஸ்டாலின்...காங்கிரஸ் புகழாரம்

by Editor / 06-09-2021 05:52:01pm
தாடியில்லா பெரியார் ஸ்டாலின்...காங்கிரஸ் புகழாரம்

பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாக அறிவித்ததன் மூலம் தாடியில்லா, தடியில்லா பெரியாக கண்முன்னே ஸ்டாலின் விளங்குகிறார் என காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை பேசினார்.

தமிழகத்தில் கடந்த 1967 ஆம் ஆண்டு முதல் திராவிடக்கட்சிகளான திமுக, அதிமுக தொடர்ச்சியாக ஆட்சி நடத்தி வருகின்றன. தமிழகத்தில் சுதந்திரப்போராட்டத்திற்கு முன்னர் காங்கிரஸ் தலைவராக இருந்த பெரியார் வீதி வீதியாக காந்தியின் ஆணையேற்று கதராடை விற்பனை செய்துள்ளார். பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக விலகிய பெரியார் நீதிக்கட்சியில் இணைந்தார். பின்னர் அது திராவிடர் கழகமாக மாறியது.

திராவிடக்கட்சியில் இணைந்து பணியாற்றிய அண்ணா, நெடுஞ்செழியன், கருணாநிதி உள்ளிட்டவர்கள் வெளியில் வந்து 1949 ஆம் ஆண்டு திமுகவை தொடங்கினர். பெரியாருக்காக தலைவர் நாற்காலி அப்படியே இருக்கும் என்ற அண்ணா பொதுச் செயலாளரானார். அதன்பின்னர் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி 1967-ஆம் ஆண்டு திமுக ஆட்சியைப்பிடித்தது. தம் வாழ்நாள் இறுதிவரை சமூக நீதிக்காக போராடி மேடைதோறும் முழங்கினார் பெரியார்.

அவரது வழியில் நடைபோடுவதாகவே அவருக்குப்பின் வந்த அண்ணாவும், கருணாநிதியும், எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கூறி வந்தனர். தமிழகத்தில் மட்டுமே 69% இட ஒதுக்கீடு உள்ளது பெரியாரின் சமூக நீதிக்கான போராட்டத்தின் விளைவு என்று கூறுவார்கள். தமிழகத்தில் தற்போதுள்ள பெரும்பாலான எதிர்க்கட்சிகள் பெரியாரின் பல சமூக நீதிக்கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்றன.

இந்நிலையில் பெரியார், அண்ணா பிறந்த நாள், திமுக தோன்றிய நாட்களை முப்பெரும் விழாவாக திமுக கொண்டாடி வரும் நிலையில் பெரியார் பிறந்த நாளான செப்.17 ஆம் தேதியை சமூக நீதி நாளாக கொண்டாட அரசு முடிவெடுத்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில் இந்த அறிவிப்பை பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் வரவேற்றன. காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதன் சட்டமன்ற கட்சித்தலைவர் செல்வப்பெருந்தகை வரவேற்று பேசும்போது பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக கொண்டாடும் அரசின் அறிவிப்பை வரவேற்பதாக தெரிவித்தார். நமக்கெல்லாம் வழிகாட்டியாக இருந்த பெரியார் இல்லாவிட்டாலும் தாடி வைக்காத, தடி இல்லாத பெரியாராக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார் என பேசினார்.

 

Tags :

Share via