சிறு கோவில்களில் வைக்கும் சிலைகளை தமிழக அரசு கரைக்கும்

by Editor / 06-09-2021 06:40:06pm
சிறு கோவில்களில் வைக்கும் சிலைகளை தமிழக அரசு கரைக்கும்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்தில் சிறு கோவில்கள் முன்பாக வைக்கப்படும் சிலைகளை இந்து அறநிலையத்துறை கரைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை பிரமாண்டமாக கொண்டாடும் மகாராஷ்டிராவில் ஒட்டுமொத்தமாக மதவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி விநாயகர் சிலை ஊர்வலங்கள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பதற்கு தமிழக அரசு தடை விதித்து உள்ளது. அதேநேரத்தில் வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டு கொள்ளலாம் எனவும் அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில் இந்து முன்னேற்ற கழக திருப்பூர் தலைவர் கோபிநாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு தலைமையிலான முதன்மை பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி தமிழக அரசு தடை விதித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டை போலவே சிறிய கோவில்களின் முன்பு வைக்கப்படும் விநாயகர் சிலைகளை இந்து அறநிலையத்துறை எடுத்து நீர்நிலைகளில் கரைக்கும் என்று தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.இதனிடையே விநாயகர் சதுர்த்தி விழாவை மாநிலத்தின் ஒரு அடையாள, பண்பாட்டு திருவிழாவாக கொண்டாடும் மகாராஷ்டிராவில் கொரோனா பரவலை முன்னிட்டு அனைத்து மதவிழாக்கள், அரசியல் ஒன்றுகூடல்களுக்கு அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தடை விதித்துள்ளார். இது தொடர்பாக கேபினட் அமைச்சர்கள், பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் உத்தவ் தாக்கரே இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய உத்தவ் தாக்கரே, விழாக்களை நாம் பின்னர்கூட கொண்டாடலாம். மக்களின் உயிருக்கும் வாழ்வுக்கும் முக்கியத்துவமும் முன்னுரிமையும் தர வேண்டும். கொரோனா தொற்று நாள் தோறும் அதிகரித்தால் நிலைமை நம் கையை மீறிப் போய்விடும் என்றார்.மேலும் மக்கள் விழாக்கள், மத பண்டிகைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று யார்தான் விரும்புவார்கள்? ஆனால் அதைவிட மக்களின் உயிர்கள்தானே நமக்கு முக்கியம் என்றும் குறிப்பிட்டார். அத்துடன் அனைத்து சமூக, அரசியல்சார் ஒன்றுகூடல்கள், பொதுக்கூட்டங்களை ரத்து செய்யவும் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். அதேபோல் இத்தகைய பொதுக்கூட்டங்கள், ஒன்றுகூடல்களை தவிர்த்து அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயம். அப்படி செய்து வந்தால் புதிய புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய சூழ்நிலை வராது. கொரோனா 2-வது அலையின் போது ஆக்சிஜன் கிடைக்காமல் மிக கடுமையாக பாதிக்கப்பட்டோம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இதனை மனதில் வைத்துக் கொண்டுதான் 3-வது கொரோனா அலையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் உத்தவ் தாக்கரே குறிப்பிட்டார். கொரோனா 3-வது அலை என்பது நமது கதவுகளை தட்டிக் கொண்டு நிற்கிறது. கேரளாவில் ஒருநாள் கொரோனா தொற்று என்பது 30,000-த்தை தாண்டியதாக உள்ளது. நிலைமை மிக மோசமாகப் போகிறது என்பதையே இது வெளிப்படுத்துகிறது. நாம் முன்னெச்சரிக்கையாக இல்லாவிட்டால் மகாராஷ்டிரா மாநிலம் மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடலாம் எனவும் எச்சரித்துள்ளார் உத்தவ் தாக்கரே.

 

 

Tags :

Share via