நெல்லை சாப்டர் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு

by Admin / 23-12-2021 12:30:34pm
நெல்லை சாப்டர் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ்  ஆய்வு

நெல்லை சாப்டர் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட போது எடுத்த படம்.

நெல்லை சாப்டர் பள்ளியில் கடந்த 17-ந்தேதி கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியானார்கள். 6 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
 
இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பள்ளி கட்டிடங்களின் தரத்தை ஆய்வு செய்து பழைய மோசமான கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை நெல்லை வந்தார். அவர், சாப்டர் பள்ளியில் விபத்து நடந்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் மற்றும் அதிகாரிகளும் உடன் சென்றனர்.

அப்போது அவர்களிடம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு மற்றும் அதிகாரிகள் நடந்த சம்பவம் குறித்து விளக்கி கூறினார்கள். அதன்பிறகு அவர் பள்ளி வளாகத்தையும் சுற்றி பார்வையிட்டார்.

அங்கிருந்து கட்டிட விபத்தில் பலியான பழவூரை சேர்ந்த சதீஷ் வீட்டிற்கு சென்றார். அங்கு அவரது பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் விபத்தில் பலியான நரசிங்கநல்லூர் அன்பழகன் வீட்டிற்கும், தச்சநல்லூர் ராமையன் பட்டியில் உள்ள விஷ்வ ரஞ்சன் வீட்டிற்கும் சென்று பலியான மாணவர்களின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

விபத்தில் காயம் அடைந்த மாணவர்களின் குடும்பத்தினரையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நெல்லை மாவட்ட மைய நூலகமான பாளை தலைமை நூலகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அறைகளுக்கும் சென்று பார்வையிட்டார்.

தொடர்ந்து நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் நடந்த மண்டல அளவிலான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார்.


 

 

Tags :

Share via