தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகள் பெற்று தருவதாக கூறி 100 கோடிக்கு மேல் நிதி மோசடி- கைது
தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகள் பெற்று தருவதாக கூறி 100 கோடிக்கு மேல் நிதி மோசடி செய்த புகாரில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் பி. டி. அரச குமாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். தமிழ்நாடு தனியார் பள்ளிகளுக்கான கூட்டமைப்பு செயலாளராக இருக்கும் இளங்கோவன், சென்னை காவல் ஆணையரிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை சாலிகிராமத்தில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் என்று பதிவு செய்யப்படாத ஒரு அமைப்பை நடத்தி வந்த அரசகுமார் தனக்குரிய அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம்; தரம் உயர்த்துதல்; சி. எம் .டி.ஏ அனுமதிகளை பெற்று தருதல் போன்ற பல்வேறு பணிகளை செய்து தருவதாக பணம் பெற்றுள்ளார். பணத்தை பெற்றதோடு, அனுமதி வாங்கி தராததால் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் மத்திய பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு படையினர் அவரை கைது செய்தனர். இவரோடு சம்பந்தப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமார் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :



















