வேன் மீது லாரி மோதல்: 4 பெண்கள் பலி

தண்ணீர் லாரி - வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பணிக்கு சென்ற 4 பெண்கள் உயிரிழந்த நிலையில் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதியம்புத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பக்கத்து கிராமங்களை சார்ந்த பலர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ள வேனின் வாயிலாக, தொழிலாளர்கள் தினமும் நிறுவனத்திற்கு அழைத்து வரப்பட்டு, பின்னர் மீண்டும் இல்லங்களுக்கு கொண்டு சென்று சேர்க்கப்படுகின்றனர்.இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல பெண்களை பணிக்கு அழைத்து வர நிறுவனத்திற்கு சொந்தமான வேன் சென்ற நிலையில், எதிரே வந்த தண்ணீர் லாரி மோதி, விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், வேன் அப்பளம் போல நொறுங்கியுள்ளது.
விபத்து தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர், வேனில் சிக்கியிருந்தவர்களை மீட்டுள்ளனர். இவர்களில் மணிமேகலை, காமாட்சி, சந்தானலட்சுமி, செல்வராணி ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும், 10 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்தது புதியம்புத்தூர் கிராமத்தினையே பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனையில் கதறி அழுதனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :