ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுத்தாக்கலுக்கு இன்றே கடைசி நாள்
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல், நடைபெறும் நிலையில் இன்றுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைகிறது. இந்த நிலையில் விதிமீறல்களை பறக்கும் படைகள் அமைத்து காண்காணிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் கட்சி சார்பில்லாமலும், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு கட்சிகளின் அடிப்படையிலும் தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 10,254 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில், ஊராட்சி வார்டுகளுக்கு மட்டும் 7,608 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.கடந்த 6 நாட்களில் 64,299 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள் என்பதால், மேலும் ஏராளமானோர் மனுக்களை தாக்கல் செய்வாளர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் 10 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள மதுபானம், பரிசுப் பொருட்களை கொண்டு சென்றால் பறிமுதல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதற்காக பறக்கும் படைகளை அமைத்து, 24 மணி நேரமும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags :