7.5% ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் திண்டாட்டம்!

by Editor / 03-10-2021 11:55:26am
7.5% ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் திண்டாட்டம்!

பொறியியல் படிப்பில் 7.5 சதவிகித ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என அறிவித்த நிலையில் இதுவரை அது குறித்த அரசாணை வெளியாகாமல் இருப்பதால் தனியார் கல்லூரிகளை தேர்ந்தெடுத்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் செலுத்த சொல்லி தனியார் கல்லூரிகள் நெருக்கடி அளிக்க தொடங்கியுள்ளன. உடனடியாக கட்டணத்தை செலுத்த கல்லூரி நிர்வாகங்கள் சொல்வதால் ஏழை அரசுப்பள்ளி மாணவர்கள் செய்வதறியாமல் திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு தொழிற்படிப்புகளில் 7.5 விழுக்காடு சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 7.5 சிறப்பு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கல்வி கட்டணம், விடுதி கட்டணம் உள்ளிட்டவற்றை அரசே ஏற்கும் என்று தமிழக அரசு அறிவித்தது அரசின் இந்த அறிவிப்பு அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பை பெற்றது.


இந்நிலையில் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என, கடந்த மாதம் 20 ம் தேதி முதல்வர் அறிவித்தபோதும் இதுவரை அதற்கான அரசாணை வெளியாகாததால், சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ், தனியார் பொறியியல் கல்லுாரிகளை தேர்வு செய்த மாணவர்கள், கட்டணம் செலுத்த இயலாமல் திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


7.5 சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 9 ஆயிரம் அரசுப்பள்ளி மாணவர்களில், 6 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே, கல்லுாரிகளை தேர்வு செய்தனர். இவர்களில், நுாற்றுக்கணக்கான மாணவர்கள் தனியார் கல்லுாரிகளை தேர்வு செய்துள்ளனர்.


கல்லுாரி சேர்க்கைக்கான உத்தரவில், 10 முதல் , 15 தினங்களுக்குள் கல்லுாரிகளில் சேர வேண்டும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது இதனையடுத்து மாணவர்கள் கல்வி கட்டணம், விடுதி கட்டணம் ஆகியவற்றை உடனடியாக செலுத்தினால் மட்டுமே கல்லூரிகளில் சேர முடியும் என கல்லுாி நிர்வாகங்கள் நெருக்கடி தருகின்றன.


ஒன்றரை லட்சம் ரூபாய் முதல், 2 லட்சம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால் அரசு பள்ளிகளில் பயின்று தனியார் கல்லூரிகளை தேர்ந்தெடுத்த ஏழை மாணவர்களும், பெற்றோர்களும் கட்டணம் செலுத்த இயலாமல் திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


கட்டணங்களை அரசே ஏற்கும் என முதல்வர் அறிவித்தாலும், அதற்கான அரசாணை வெளியாவதில் ஏற்படும் தொடர் கால தாமதம், மாணவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கருத்து தெரிவிக்கும் கல்வியாளர்கள், அரசு கட்டணங்களை ஏற்பதாக தெரிவித்து இரண்டு வார காலத்தை கடந்தும் இதுவரை அரசாணை வெளியீடாமல் இருப்பது சரியானதொரு நடவடிக்கை இல்லை என்கின்றனர்.


அறிவிப்பு வெளியிடப்பட்ட ஓரிரு தினங்களிலேயே அரசாணை வெளியிட்டு முதலமைச்சரின் அறிவிப்பை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வந்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர். 

 

Tags :

Share via