மகாளய அமாவாசை: ராமேஸ்வரத்தில் புனித நீராடவும் பக்தர்களுக்குத் தடை

by Writer / 05-10-2021 10:03:45am
மகாளய அமாவாசை: ராமேஸ்வரத்தில் புனித நீராடவும் பக்தர்களுக்குத் தடை

மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடவும், வரும் 5 மற்றும் 6ஆம் தேதி திதி தர்ப்பணம் அளிக்கவும் ராமநாதசுவாமி கோவிலில் வழிபடவும் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கேட்டுக்கொண்டுள்ளார்.மகாளய அமாவாசை தினம் வரும் 6ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அன்று நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் காசி,கயா, ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட புனித நீர் நிலைகளில் நீராடி இறந்தவர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவார்கள்.

தமிழ்நாட்டில் பவானி கூடுதுறை, திருச்சி காவிரி ஆறு, திருவையாறு, மயிலாடுதுறை ஆகிய காவிரி கரையோரங்களில் திதி கொடுத்து வழிபடுவது வழக்கம். கொரோனா பரவலைக்கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு திதி தர்ப்பணம் தர தடை விதிக்கப்பட்டதால் வீடுகளிலேயே மக்கள் திதி கொடுத்து முன்னோர்களை வழிபட்டனர். ஆடி அமாவாசை நாளிலும் மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு வீடுகளிலேயே திதி தர்ப்பணம் அளித்தனர்.

மகாளய பட்ச காலமாக இருப்பதால் கடந்த சில நாட்களாக ஏராளமானோர் ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் அளித்து வழிபட்டு வருகின்றனர். கொரோனா மூன்றாம் அலை பரவலை தடுக்கும் வகையில் மக்கள் அதிகம் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளதால் வரும் 5,6ஆம் தேதிகளில் ராமேஸ்வரத்தில் திதி, தர்ப்பணம் தரவும், புனித நீராடவும் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via