வங்கியில் பணம் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் இருவரை அம்பையில் கைது செய்த மங்களூர் தனிப்படை போலீசார்.
கர்நாடக மாநிலம் மங்களூர் அருகேயுள்ள கூட்டுறவு சங்க வங்கியில் கடந்த 17 -ந் தேதி முகமூடி அணிந்த மர்ம கும்பல் துப்பாக்கி முனையில் ஊழியர்களை மிரட்டி பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், ரொக்க பணத்தை கொள்ளை அடித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது கொள்ளையர்கள் கேரளா வழியாக தமிழகத்திற்கு கார்களில் தப்பி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து சுங்கச்சாவடி உள்பட பல்வேறு பகுதிகளில் இருய்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதன் பெயரில் கொள்ளையர்களின் காரின் நம்பரை வைத்து விசாரித்தபோது, இந்த சம்பவத்தில் தொடர்புடைய நெல்லை பத்மநேரி பகுதியை சேர்ந்த முருகாண்டி, மற்றும் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த யோஸ்வா ஆகிய இருவர் அம்பையிலுள்ள தனியார் லாட்ஜில் பதுங்கியிருப்பதுற தெரியவந்தது. தொடர்ந்து மங்களூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரா, மகேந்திர பிரசாத் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார், அம்பை அருகேயுள்ள பாபநாசத்தில் முருகாண்டி, யோஸ்வா ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து சுமார் 2 கிலோ தங்க நகைகள், ரூ.3.80 லட்சம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து இன்று மாலை முருகாண்டி, யோஸ்வா ஆகிய 2 பேரையும் அம்பை நீதிமன்றத்தில் நீதிபதி அச்சுந்தன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர், பின்னர் அம்பையிலுள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நீதிமன்றத்தில் மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்தனர். தொடர்ந்து அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அச்சுதன் வருகிற வெள்ளிக்கிழமை சம்பவம் நடந்த எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். தொடர்ந்து இருவரையும் மங்களூர் தனிப்படை போலீசார் காரில் அழைத்து சென்றனர்.
தேசிய அளவில் பரபரப்பு ஏற்படுத்திய மங்களூர் வங்கி கொள்ளை வழக்கில் தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் பிடிபட்டிருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
Tags : வங்கியில் பணம் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் இருவரை அம்பையில் கைது செய்த மங்களூர் தனிப்படை போலீசார்.



















