நவீன தமிழ் இலக்கிய  கவிஞர் ஞானக்கூத்தன்(அக்டோபர் 7,)

by Editor / 06-10-2021 06:15:40pm
நவீன தமிழ் இலக்கிய  கவிஞர் ஞானக்கூத்தன்(அக்டோபர் 7,)

 

ஞானக்கூத்தன் (அக்டோபர் 7, 1938 - சூலை 27, 2016) ஒரு இந்திய தமிழ்க் கவிஞர் ஆவார். இவரது இயற்பெயர் அரங்கநாதன். இவர் பிறந்த ஊர் நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை அருகே உள்ள திருஇந்தளூர் ஆகும். “திருமந்திரம்” நூல் ஏற்படுத்திய தாக்கத்தால் தனது புனைப்பெயராக ஞானக்கூத்தன் என்ற பெயரை ஏற்றார். "அன்று வேறு கிழமை", "சூரியனுக்குப் பின்பக்கம்", "கடற்கறையில் சில மரங்கள்", "மீண்டும் அவர்கள்" மற்றும் "பென்சில் படங்கள்" போன்ற நூல்களை எழுதியுள்ளார். இவர் நவீன தமிழ் இலக்கியத்தின் கவிஞராக போற்றப்படுகிறார். இவரின் கவிதைகள், "கல்கி", "காலச்சுவடு" மற்றும் "உயிர்மெய்" போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.

இராமகிருஷ்ணன், சா. கந்தசாமி, ந. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரோடு இணைந்து ஞானக்கூத்தன் துவங்கிய இதழ் 'கசடதபற'. 'கவனம்' என்ற சிற்றிதழைத் தொடங்கினார். 'ழ' இதழின் ஆசிரியர்களில் ஆத்மநாம், மற்றும் ராஜகோபாலனுடன் இவரும் ஒரு ஆசிரியராக இருந்தார்.

இவர் 'மையம்', 'விருட்சம்' (தற்போது நவீன விருட்சம்), மற்றும் 'கணையாழி' பத்திரிகைகளில் பங்களித்திருக்கிறார். க. நா. சுப்பிரமணியத்தின் 'இலக்கிய வட்டம்', சி. மணியின் 'நடை' போன்ற சிற்றிதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளது. இவரது கவிதைகள் பெரும்பாலும் சமூகத்தை சித்தரிப்பதாக உள்ளது.இவர் 1968இல் இருந்து கவிதைகள் எழுத ஆரம்பித்தார். இவர் 'பிரச்சினை' என்கிற கவிதையின் மூலம் அறிமுகமானார். 1998இல் இவரது கவிதைகள் "ஞானக்கூத்தன் கவிதைகள்" என்கிற பெயரில் வெளியிடப்பட்டது.மருதநாயகம் (திரைப்படம்) திரைக்கதையை, புவியரசு, சுஜாதா(எழுத்தாளர்) ஆகியோருடன் இணைந்து எழுதியுள்ளார்.இயற்றிய நூல்கள்,

கவிதை நூல்கள்:அன்று வேறு கிழமை, சூரியனுக்குப் பின்பக்கம், கடற்கரையில் சில மரங்கள்

மீண்டும் அவர்கள், பென்சில் படங்கள், ஞானக்கூத்தன் கவிதைகள், என் உளம் நிற்றி, நீஇம்பர் உலகம்

கட்டுரை நூல்கள்- கவிதைக்காக கவிதைகளுடன் ஒரு சம்வாதம். பிற நூல்கள் -ஞானக்கூத்தன் நேர்காணல்கள். 

2010இல் கவிதைக்காக சாரல் விருதினைப் பெற்றார். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வழங்கும், இலக்கிய பங்களிப்பிற்கான விஷ்ணுபுரம் விருதினை (2014)இல் பெற்றார்.

கவிஞர் ஞானக்கூத்தன் 2016 சூலை 27 புதன்கிழமை தனது 77வது அகவையில் சென்னையில் காலமானார்.

 

பரிசில் வாழ்க்கை

வாரத்தில் ஒன்றிரண்டு வெளியூர்க் கூட்டம்
வரப்பார்க்கும் மணியார்டர் மாலை துண்டு
காரத்தில் பேசத்துப் பாக்கிச் சூடு
கல் பிறந்த காலத்தில் பிறந்தோர் தம்மை
நேரத்தில் களிப்பூட்ட அகநானூறு
நெய்யாற்றில் பாலாற்றில் பேசிப் பார்த்த
தீரத்தில் தெரிந்தெடுத்த நகைத்துணுக்கு
தமிழர்க்கு வேறென்ன கொடுக்க வேண்டும்

புகையூதி ரயில் வண்டி எழும்பூர் நீங்கும்
பேச்சாளர் மனதில் கையொலிகள் கேட்கும்

பேச்சாளர் வாய் திறக்க வாய் திறந்து
பழங்குடிகள் கேட்டார் தம் எளிய மூக்கின்
மூச்சுக்கு வயதுமூவா யிரமாம் என்று
முதல் முதலாய்க் கேட்டதனால் திணறிப் போனார்
வாய்ச்சிருக்கும் இந்நாளின் வாழ்வை நொந்தார்
வளம் திரும்ப வேண்டுமெனில் இவருக்கான
பேய்ச் சுரைக்காய் சின்னத்தை மறவோம் என்றார்
பெரியதொரு மாலையிட்டு வணக்கம் போட்டார்

புகையூதி ரயில் வண்டி எழும்பூர் நீங்கும்
பேச்சாளர் மனம் புதிய பேச்சைத் தீட்டும்

ஆத்தூரில் மறு கூட்டம். தலைமை யேற்ற
அதிகப்படி தமிழர் ஒரு சுருதி சேர்த்தார்
காத்தோட்டம் இல்லாத கூட்டத்துக்குப்
பேச்சாளர் சூடேற்றிப் பேசும் போதில்
ஆத்தாடி என்றொருவன் கூச்சலிட்டான்.

அடிதடிகள் பரிமாறிக் கொண்ட பின்பு
நீத்தாலும் உயிர் தொடர்வேன் என்றார். நண்பர்
விடிவதற்குள் நாளிதழில் தலைவரானார்
கும்மியடி தமிழ் நாடு முழுவதும்
குளிர்ந்திடக் கைகொட்டிக் கும்மியடி…
காணிக்கை கொண்டு வாருங்கடி… கு
லோத்துங்க சோழனைப் பாருங்கடி
நாளை அமைச்சரைப் பாருங்கடி… மவ
ராசனைப் பார்த்துக் கும்மியடி…
சென்மம் எடுத்தது தீருதடி… இந்த
சித்திரச் சாமிக்குக் கும்மியடி

 

Tags :

Share via