பி.எம். கேர்ஸ் நிதி மூலம் அரசு மருத்துவமனைகளில் 35 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
நாடு முழுவதும் பி.எம்.கேர்ஸ் நிதி மூலம் அரசு மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ள 35 பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
கொரோனா பெருந்தொற்று தொடங்கிய பின் இந்தியாவில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தித் திறனை அதிகரிக்க அரசால் ஆக்கபூா்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.நாடு முழுவதும் 1224 பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க நிதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 1,100க்கும் அதிகமான நிலையங்களில் உற்பத்தியை துவங்கிவிட்டன. இதன்மூலம் நாள்தோறும் 1,750 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
மலைப் பகுதிகள், தீவுகள், சிக்கலான நிலைமை கொண்ட பகுதிகள் ஆகியவற்றின் சவால்களை கையாள்வதுடன் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் மேலும் 35 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார். உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், உத்தரகண்ட் முதல்வர், கவர்னர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
நாம் கொரோனா தொற்றுக்கு எதிராக பல தடைகளை கடந்து வந்துள்ளோம். கொரோனா அச்சுறுத்தலை சிறப்பாக எதிர்கொண்டோம். ஆக்சிஜன் விநியோகத்திற்காக சிறப்பு ரெயில்களை இயக்கினோம்; விமானப் படையும் ஆக்சிஜனை கொண்டு செல்ல உதவியது. இதற்கெல்லாம் பி.எம்.கேர்ஸ் நிதி பெரும் உதவியாக இருந்தது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் கொரோனாவை எதிர்கொள்ள உதவிப் புரிந்தது.
இதுவரை 93 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. விரைவில் 100 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ் செலுத்தி சாதனை படைப்போம். உத்தரகண்ட் மாநிலத்தில் தகுதி வாய்ந்த 95 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை இந்தியா வழிநடத்தி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.இதனையடுத்து நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் செயல்பட இருக்கின்றன.
பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை, தர்மபுரி அரசு மருத்துவமனை, சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனை, பெரியக்குளம், கோவை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் 70 ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் திறந்து வைக்கப்பட்டன.
Tags :