தமிழகத்தில் 10 மாவட்டங்களில்  பலத்த மழைக்கு வாய்ப்பு

by Editor / 11-10-2021 04:09:15pm
தமிழகத்தில் 10 மாவட்டங்களில்  பலத்த மழைக்கு வாய்ப்பு

 

சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில்  இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக  சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய திருநெல்வேலி பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.


நாளை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய கூடும்.


அடுத்த 3 நாட்களுக்கு நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.


சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக அரியலூரில் 10 செ.மீ., புதுச்சேரி, சென்னை சோழிங்கநல்லூர், மன்னார்குடி, வீரகனூர், இரணியல் தலா 7 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது.


தலைஞாயிறு, தென்பரநாடு, கங்கவள்ளி தலா 6 செ.மீ., செஞ்சி, பெருங்கலூர், ஒரத்தநாடு, ஒகேனக்கல் தலா 5 செ.மீ., சேலம், பெரம்பலூர், திருத்துறைப்பூண்டி, சத்தியபாமா பல்கலைக்கழகம், பாரூர் தலா 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
வரும் 13ம் தேதி அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 15ம் தேதி ஆந்திர - ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

 

Tags :

Share via