33 மாவட்டங்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ.300 கோடி

by Editor / 12-12-2021 02:47:12pm
33 மாவட்டங்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ.300 கோடி

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை பெய்த கன மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டதோடு,  பொதுமக்களின் உடைமைகள் கடுமையாக சேதமடைந்தன.குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, விழுப்புரம்,  பெரம்பலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், தென்காசி, திருநெல்வேலி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளன.  

பெரும் பாலான சாலைகள் முழுமையாக சிதைந்து  சின்னாபின்னமாக காட்சி அளிக்கின்றன.மழை பாதிப்புக்காக நிவாரணம் மற்றும் தற்காலிக சீரமைப்பு பணி மேற்கொள்ள மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து  நிதி விடுவிக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில் 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு ரூ.132 கோடி, நகராட்சி நிர்வாகத்துக்கு ரூ.65 கோடி, சென்னை குடிநீர் வாரியத்துக்கு ரூ.15 கோடி, மின்சாரத்துறைக்கு ரூ.15 கோடி நிதி  ஒதுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறைக்கு  ரூ.17 கோடி, ஊரக மேம்பாட்டு துறைக்கு ரூ.10 கோடி, கால்நடைத்துறைக்கு ரூ.4 கோடி, பொதுப்பணித்துறைக்கு ரூ.3 கோடி ஒதுக்கி அரசு  உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு கழகத்துக்கு ரூ.55 லட்சம், பொது சுகாதாரத்துறைக்கு ரூ.6 கோடி,மீன்வளத்துறைக்கு ரூ.45 லட்சம், நீர்வளத்துறைக்கு ரூ.20 கோடி என மொத்தம் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், இப்பணிகள் முடிக்கப்பட்ட பின்  அதுதொடர்பான விவரங்களை காலதாமதமின்றி அறிக்கையாக அனுப்பி வைக்க வேண்டும் எனவும்  அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via