இந்தியாவில் முழு ஊரடங்கு அவசியம்: பிரபல நிபுணர்!

'கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பணியில் இந்தியா தன் ராணுவத்தை ஈடுபடுத்த வேண்டும். சில வாரங்களுக்கு முழு ஊரடங்கை அறிவிக்கலாம்' என அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொற்றுநோய் நிபுணர் டாக்டர் ஆன்டனி பாசி கூறியுள்ளார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக உள்ளது. ஆக்சிஜன் மருந்து தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த பொருட்களை அனுப்பி வைத்து பல நாடுகள் உதவி வருகின்றன.தொற்றுநோய் சிகிச்சை நிபுணரான அமெரிக்க அதிபரின் ஆலோசகர் டாக்டர் பாசி இந்தியாவில் உள்ள நிலவரம் குறித்து கூறியுள்ளதாவது: இந்தியாவில் தற்போது நிலைமை மிக மோசமாக உள்ளது. மருத்துவமனையில் படுக்கை வசதிகள் ஆக்சிஜன் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மனதில் அச்சம் எழுந்துள்ளது. இந்த நேரத்தில் இந்தியாவுக்கு தேவையான உதவிகளை அமெரிக்காவை போல மற்ற நாடுகளும் செய்ய வேண்டும்.தடுப்பூசி வழங்கும் பணியை வேகப்படுத்த வேண்டும்; விரிவுபடுத்த வேண்டும். மற்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளுக்கும் இந்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். இதற்கான பலன் உடனடியாக கிடைக்காவிட்டாலும் வைரஸ் பரவலை எதிர்காலத்தில் தடுக்க முடியும்.உடனடி நிவாரணமாக தன்னிடம் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் இந்தியா பயன்படுத்த வேண்டும். தற்காலிக மருத்துவமனை வசதிகளை ஏற்படுத்த ராணுவத்தை பயன்படுத்த வேண்டும். மேலும் சில வாரங்களுக்கு முழு முடக்கத்தை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags :