21 காளைகளை அடக்கி தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிக காளைகளை அடக்கி சிறந்த வீரருக்கான விருதை பெற்றார்பிரபாகரன்
மதுரை பலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போட்டிக்காக 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாடிவாசல் தயார் செய்யப்பட்டு, அதில் 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் களம் கண்டனர். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
போட்டி தொடங்கும் முன்பாக மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வீரர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டு விழாவில் பங்கேற்று சிறப்பாக விளையாடினர். பாரம்பரிய வழக்கப்படி முதலாவதாக காளையாக பாலமேடு கோயில் காளை அவிழ்க்கப்பட்டது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணி வரை விறுவிறுப்பாக நடந்தது. சீறி பாய்ந்து வந்த காளைகளை அடக்கிய காளையர்களுக்கும், காளையர்களுக்கு போக்குக் காட்டிய காளைகளுக்கும் கட்டில், பீரோ, தங்கக் காசு உள்ளிட்ட பலவகையான பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மாலை 5 மணியளவில் புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. போட்டியில் மொத்தம் 729 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை மாவட்டத்தில் உள்ள பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் 21 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். முன்னதாக 2020, 2021ம் ஆண்டிலும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பிராபாகரன் முதல் பரிசை வென்றிருந்தார். இதைத்தொடர்ந்து 3வது ஆண்டாக அதிக காளைகளை அடக்கி முதலிடம் பெற்றுள்ளார். முதலிடம் பெற்ற பிரபாகரனுக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.11 காளைகளை அடக்கி 2வது இடம் பிடித்த மாடுபிடி வீரர் கார்த்திக் ராஜாவுக்கு டிவி பரிசாக வழங்கப்பட்டது.சிறந்த காளைக்கான முதல் பரிசாக சிவகங்கை புலியூரை சேர்ந்த சூளிவலி மாட்டின் உரிமையாளருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. சிறந்த காளைக்கான 2வது பரிசாக நாட்டு மாடு, காளையின் உரிமையாளர் பிரகாஷ்க்கு வழங்கப்பட்டுள்ளது.
Tags :