கொரோனா பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியது.
இந்தியாவில் கடந்த மாதம் 28-ந்தேதி வரை தினசரி பாதிப்பு 6 ஆயிரம் என்ற அளவிலேயே இருந்தது. அதன்பிறகு மின்னல் வேகத்தில் பரவிய தொற்றால் நாள்தோறும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.
இதனால் நாட்டில் 3-வது அலை தொடங்கி விட்டதாகவும், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் படியும் சுகாதாரத்துறையினர் எச்சரித்தனர்.
இதைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனினும் கொரோனா பரவல் வேகம் தொடர்ந்து அதிகரித்தது.
இந்நிலையில் 3-வது அலையில் இதுவரை இல்லாத அளவில் நேற்றைய பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலையில் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,17,532 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் . நேற்று முன்தினம் 2,82,970 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று ஒரேநாளில் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த மே மாதம் முதல் வாரத்தில் 2-வது அலை உச்சத்தில் இருந்தது. மே 7-ந்தேதி நிலவரப்படி, ஒரே நாளில் 4.14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உச்சத்தை எட்டியது. அதன்பிறகு படிப்படியாக சரியத் தொடங்கியது. 15-ந்தேதி 3.10 லட்சமாகவும், மறுநாள் 2.8 லட்சமாகவும் இருந்தது.
பின்னர் நாள்தோறும் பாதிப்பு சரிந்து வந்த நிலையில், 8 மாதங்களுக்கு பிறகு தற்போது தினசரி பாதிப்பு மீண்டும் 3 லட்சத்தை தாண்டி உள்ளது.
இன்றைய நிலவரப்படி, தினசரி பாதிப்பு விகிதம் 15.13-ல் இருந்து 16.41 சதவீதம் ஆகவும், வாராந்திர பாதிப்பு 15.53-ல் இருந்து 16.06 சதவீதம் ஆகவும் உயர்ந்துள்ளது.
நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 82 லட்சத்து 18 ஆயிரத்து 773 ஆக உயர்ந்தது.
நேற்று அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 43,697 பேரும், கர்நாடகாவில் 40,499 பேரும், கேரளாவில் 34,217 பேரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் 26,981, குஜராத்தில் 20,966, உத்தர பிரதேசத்தில் 17,662, டெல்லியில் 13,785, ராஜஸ்தானில் 13,398, மேற்கு வங்கத்தில் 11,447, ஒடிசாவில் 11,607, ஆந்திராவில் 10,057 பேருக்கு தொற்று உறுதியானது.
கொரோனா பாதிப்பால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் நாள்தோறும் சற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் மேலும் 491 பேர் இறந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதில் கேரளாவில் விடுபட்ட மரணங்கள் உள்பட 134 பேர் அடங்குவர். இதுதவிர மகாராஷ்டிராவில் 49, மேற்கு வங்கத்தில் 38, தமிழ்நாட்டில் 35, டெல்லியில் 35, பஞ்சாபில் 29, கர்நாடகாவில் 21 பேர் நேற்று இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,87,693 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 2,23,990 பேர் முழுமையாக நலம் பெற்றனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 58 லட்சத்து 7 ஆயிரத்து 29 ஆக உயர்ந்தது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 19,24,051 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை நேற்று முன்தினத்தைவிட 93,051 அதிகம் ஆகும்.
நாடு முழுவதும் நேற்று 73,38,592 டோஸ் தடுப்பூசிகளும், மொத்தம் 159 கோடியே 67 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் 18,69,642 பரிசோதனை செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று பரிசோதனை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் சமீப நாட்களில் இல்லாத அளவில் நேற்று ஒரேநாளில் 19,35,180 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 70.93 கோடியாக உயர்ந்துள்ளது.
Tags :