அசாமின் புதிய முதல்வர் ஹிமாந்தா  வடகிழக்கு மாநிலங்களில் பாஜக செல்வாக்கு உயர காரணமானவர் 

by Editor / 24-07-2021 07:52:15pm
 அசாமின் புதிய முதல்வர் ஹிமாந்தா  வடகிழக்கு மாநிலங்களில் பாஜக செல்வாக்கு உயர காரணமானவர் 

 


அசாமின் புதிய முதல்வராக  பதவியேற்றுக் கொண்டார், ஹிமாந்தா பிஸ்வா சர்மா....
நடந்து முடிந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மிக எளிதில் தனிப்பெரும்பான்மையை வசப்படுத்தி மீண்டும் தனது தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது பாரதிய ஜனதா கட்சி. அதன்பின் மாநிலத்தின் முதல்வர் யார் என்ற கேள்விதான் அதிகம் ஒலிக்கத் தொடங்கியது. காரணம், தற்போது பாரதிய ஜனதா கட்சியின் முதல்வராக இருந்த சர்பானந்த சோனாவால் மீது எந்தவிதமான குற்றச்சாட்டும் கிடையாது. அவர் சுமுகமான முறையில் கடந்த 5 ஆண்டுகளாக மாநிலத்தில் ஆட்சியை நடத்தி இருக்கிறார்.

ஆனால், அவருக்கு அடுத்த இடத்தில் இருந்தவரான ஹிமாந்தா பிஸ்வா இப்போது அரியணையில் ஏறியிருக்கிறார். 
ஹிமாந்தா பிஸ்வா சர்மா கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின சட்டப்பேரவை உறுப்பினராக இருந்ததோடு மட்டுமல்லாமல், முன்னாள் முதல்வர் தருண் கோகாய் அமைச்சரவையில் நிதி, சுகாதாரத் துறை உள்ளிட்ட முக்கிய அமைச்சகங்களையும் கையில் வைத்திருந்தார். அசாமில் 15 ஆண்டுகளாக தன்வசம் வைத்திருந்த தருண் கோகாய்க்கு ஹிமாந்தா மிகவும் நெருக்கமானவர்.

பிறகு, அந்தக் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு தீவிரமாக தேர்தல் பணியாற்றி, 15 ஆண்டு காலம் ஆட்சியை கையில் வைத்திருந்த காங்கிரஸிடம் இருந்து அதிகாரத்தைப் பறித்து பாரதிய ஜனதா கட்சியிடம் ஒப்படைத்தார், ஹிமாந்தா பிஸ்வா சர்மா. இதனால், அசாம் மாநில மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் பிரபலமான முகமாக கண்டறியப்பட தொடங்கியுள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவின் செல்வாக்கு உயரவும் காரணமாக இருக்கிறார்.


கொரோனா பெருந்தொற்று காலத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் என்ற முறையில் அசாம் மாநிலத்தில் ஹிமாந்தா பிஸ்வா சர்மா ஆற்றிய களப்பணிகள் பொதுமக்கள் மத்தியிலும், கட்சியிலும் அவருக்கான செல்வாக்கை பல மடங்கு உயர்த்தியது. தினமும் பல ஆய்வுகளுக்குப் போவது, ஊடகங்களை சந்திப்பது, அதிகாரிகளுடன் ஆலோசனை ஈடுபடுவது, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் வேண்டிய உதவிகளை கேட்டுப் பெறுவது என அப்போதைய முதல்வர் சோனவாலை முற்றிலுமாக ஓரம்கட்டிவிட்டு, நொடிக்கு நொடி அவர் காட்டிய அதிரடி பல்வேறு தரப்பினராலும் கவனம் ஈர்க்கப்பட்டது. அந்தத் தருணத்தில் மொத்த அரசு எந்திரத்தையும் ஹிமாந்தா பிஸ்வா சர்மாதான் நடத்தினார்.


அப்போது, சர்பானந்த சோனோவாலை ஹிமாந்தா பிஸ்வா சர்மா முந்துகிறார் என்ற பேச்சு வெளிப்படையாகவே எழுந்தது. இது இரண்டு தலைவர்களின் தொண்டர்களிடமும் வெளிப்படையாக புகையத் தொடங்கியது. தேர்தல் காலத்தில் இந்த இடைவெளி மேலும் அதிகரிக்க தொடங்கியது.


கடந்த மாதம் அசாம் மாநிலத் தேர்தல் தொடர்பான பரப்புரை பாடல் ஒன்றை வெளியிட்டுள்ள ஹிமாந்தா பிஸ்வா சர்மா, ஆதரவாளர்கள் 'ஹிமாந்தா வர்றாரு விடியல் தரப் போறாரு' என்ற அர்த்தம் கொண்ட பாடலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். 


தேர்தல் பிரசாரக் கூட்டங்களில்கூட முதல்வருக்கு கூடும் கூட்டத்தைவிட, ஹிமாந்தா பிஸ்வா சர்மாவிற்கு அதிகம் கூட்டம் கூடுவதை பார்க்க முடிந்தது. குறிப்பாக, இளைஞர்கள் 'மாமா' என்ற அடைமொழியுடன் இவரை அழைத்து வந்தனர். எளிதாக மக்களை ஈர்க்கக் கூடிய தலைவராக இவர் அறியப்படுவதால், இந்த முறை முதல்வர் பதவி இவருக்கே வழங்கப்பட்டுள்ளது.இவர் விஸ்வகர்ம இனத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு -ரவி அருண் 

 

Tags :

Share via