கணவனோடு ஓசி செல்போனில் பேசியதில் மலர்ந்த கள்ளக்காதலால் கணவன் கொலை. 

by Editor / 27-04-2025 04:55:35pm
கணவனோடு ஓசி செல்போனில் பேசியதில் மலர்ந்த கள்ளக்காதலால் கணவன் கொலை. 

தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள நாலாங்கட்டளை கிராமத்தில் வாடகை வீட்டில் வி.கே.புதூரைச் சேர்ந்த ஆமோஸ் (வயது 26) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கட்டிட தொழிலாளியான இவர் நந்தினி என்ற பெண்ணை இன்ஸ்டாகிராம் மூலமாக காதலித்து 4 ஆண்டுகளுக்கு முன்பு  திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு 2 வயதில் ஹன்சிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் நேற்று ஆமோஸ் வீட்டிற்கு புல்லட்டில் வந்த மர்ம நபர் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஆமோஸ் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த கடையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆமோஸ்சின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

மனைவி கண் முன்னே நடந்த கொலை தொடர்பாக மனைவி நந்தினி முன்னுக்கு பின் முரண்பாடாக பேசியதால் நந்தினி மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரணை மேற்கொண்டதுடன் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், ஆமோஸிடம் செல்போன் இல்லாததால் அவருடன் வேலை பார்க்கும் சிங்கம்பாறையை சேர்ந்த ஜோசப் ஸ்டீபன் மகன் அந்தோணி டேனிஸ் செல்போனில் ஆமோஸ் அவரது மனைவியுடன் பேசியுள்ளார். தொடர்ந்து அதன் மூலமாக டேனிஸ்க்கும், நந்தினிக்கும் இடையே தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு இடையூறாக இருந்ததால் ஆமோஸை வெட்டி கொலை செய்தது தெரியவந்துள்ளது.
 

 

Tags : கணவனோடு ஓசி செல்போனில் பேசியதில் மலர்ந்த கள்ளக்காதலால் கணவன் கொலை. 

Share via