வெடி விபத்துக்கு காரணமான வீட்டின் உரிமையாளர்உள்ளிட்ட இரண்டு பேர் கைது
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பாண்டியன் நகர் சத்யா காலனி என்ற பகுதியில் அமைந்திருக்கும் பொன்னம்மாள் நகரில் கார்த்தி என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இங்கு கோயில் விசேஷங்களுக்கு நாட்டு வெடிகள் தயாரித்து கார்த்தி கொடுத்து வந்ததாகவும், இந்த நிலையில் கார்த்தியின் வீட்டில் திடீரென அதிக சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் ஒன்பது மாத குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அருகில் உள்ள சுமார் 10 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், திமுக எம்எல்ஏ செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். விபத்தை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அருகே உள்ள 8 வீடுகள் பயங்கர சேதம் அடைந்த நிலையில் தீயணைக்கும் படையினர், சம்பவ இடத்தில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தடய அறிவியல் நிபுணர்கள், வெடித்தது என்ன என்று ஆய்வு செய்கின்றனர். சம்பவ இடத்தில் காவலர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து திருமுருகன் பூண்டி காவல் நிலைய போலீசார் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இங்கு ஏராளமான நாட்டு வெடிகள் வெடிக்காத நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேலும், வெடி தயாரித்துக் கொண்டிருந்த போது காயமடைந்து தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள இருவரிடமும் போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
வெடி விபத்துக்கு காரணமான சரவணகுமார் மற்றும் வீட்டின் உரிமையாளர் கார்த்தி ஆகிய இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Tags : வெடி விபத்துக்கு காரணமான வீட்டின் உரிமையாளர்உள்ளிட்ட இரண்டு பேர் கைது