பன்றியின் சிறுநீரகம்அறுவை சிகிச்சை....அமெரிக்காவில் மூளைச்சாவு அடைந்தவருக்கு

by Admin / 21-01-2022 02:32:59pm
பன்றியின் சிறுநீரகம்அறுவை சிகிச்சை....அமெரிக்காவில் மூளைச்சாவு அடைந்தவருக்கு

அமெரிக்க நாட்டில் மருத்துவ விஞ்ஞானம் நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது. வியக்கத்தக்க ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
 
மரபணு மாற்றியமைக்கப்பட்ட பன்றியின் உறுப்புகளை மனிதர்களுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பொருத்தி சோதிக்கத்தொடங்கி உள்ளனர். 

சமீபத்தில் அங்குள்ள பால்டிமோர் நகரில் டேவிட் பென்னெட் என்ற 57 வயது நோயாளிக்கு மரபணு மாற்றியமைக்கப்பட்ட பன்றியின் இதயத்தை டாக்டர்கள் பொருத்தி அவர் குணம் அடைந்து வருகிறார்.

இந்த நிலையில் மனிதர்களுக்கு மரபணு மாற்றியமைக்கப்பட்ட பன்றியின் உறுப்புகளை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பயன்படுத்துவதற்கான அடுத்த கட்ட சோதனையை அமெரிக்காவில் வெற்றிகரமாக தொடங்கி இருக்கிறார்கள்.

அந்த வகையில் அங்கு பர்மிங்ஹாம் நகரில் உள்ள அலபாமா மாகாண பல்கலைக்கழகத்தில் மூளைச்சாவு அடைந்து தானமாக பெறப்பட்ட ஒருவரது உடலில், மரபணு மாற்றியமைக்கப்பட்ட பன்றியின் சிறுநீரகங்களை பொருத்தி சோதனையை மேற்கொண்டுள்ளனர். 

இந்த ஆண்டு இறுதியில் உயிரோடு இருக்கிற சிறுநீரக செயலிழப்பு நோயாளிக்கு மரபணு மாற்றியமைக்கப்பட்ட பன்றியின் சிறுநீரகங்களைப் பொருத்துவதற்கு இது ஒத்திகை என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுபற்றி அந்தப் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஜெய்மே லாக் கூறும்போது, "உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு உறுப்பு பற்றாக்குறை உண்மையில் ஒரு தீர்க்கப்படாத நெருக்கடியாக உள்ளது. 

இதற்கு உண்மையான தீர்வு நம்மிடம் ஒருபோதும் இல்லை. இந்த நிலையில் தான் இத்தகைய சோதனை முயற்சிகளை தொடங்கி இருக்கிறோம்” என குறிப்பிட்டார்.

 

Tags :

Share via