கேரளாவில் இன்று முதல் கனமழை: 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை 

by Editor / 28-05-2021 03:55:47pm
கேரளாவில் இன்று முதல் கனமழை:  7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை 

 

 

அரபிக் கடலில் உருவான 'டவ்தே புயல்' கடந்த 17ம் தேதி இரவு குஜராத் மாநிலம் புனே அருகே கரையை கடந்தது. சுமார் 28 மணி நேரம் கோரத்தாண்டவம் ஆடிய புயல் குஜராத்தில் 53 பேர் பலியாயினர். புயல் காரணமாக கேரளா, தமிழகம் உட்பட சில மாநிலங்களில் மழை பெய்தது.

 இந்த நிலையில் வங்கக்கடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'யாஸ்' புயலாக மாறியது. பின்னர் கடந்த 26ம் தேதி பாரத்தீவு- சாகர் தீவுக்கு  இடையே  (ஒடிசா- மேற்கு வங்கம்) கரையை கடந்து பாதிப்பை ஏற்படுத்தியது. 'யாஸ்' புயல் காரணமாக கேரளாவிலும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.

 கேரளாவில் வழக்கமாக ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு வரும் 31-ம் தேதி அல்லது அதற்கு முன்பாகவே பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்ததுகடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் மழை பெய்யவில்லை. இந்தநிலையில் இன்று முதல் மீண்டும் கோடை மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா மற்றும் கொல்லம் மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரள கடற்கரையில் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் நேற்றும், இன்றும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கேரளாவில் வரும் 31ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாலத்தீவு, இலங்கை மற்றும் வங்காள விரிகுடாவில் ஏற்கனவே தென் மேற்கு பருவமழை தொடங்கி விட்டது. கடந்த 5 ஆண்டுகளில் தற்போதுதான் கேரளாவின் பெரும்பாலான அணைகளில் அதிக அளவு தண்ணீர் உள்ளது. பருவமழைக்கு முன்பாகவே அணைகள் நிரம்புவது மிக அபூர்வமாகும். கடந்து 2019 ம் ஆண்டை விட தற்போது அணைகளில் இரு மடங்கு தண்ணீர் உள்ளது. 2018 ல் இதே நாளில் இடுக்கி அணையில் 23.88 சதவீதம் தண்ணீர் இருந்தது. தற்போது இந்த அணையில் 35 சதவீதத்துக்கும் கூடுதலாக தண்ணீர் உள்ளது.

 

 

Tags :

Share via