2வது அலைக்கு பிரதமரே காரணம்: ராகுல் காந்தி கடும் பாய்ச்சல் 

by Editor / 28-05-2021 04:02:52pm
 2வது அலைக்கு பிரதமரே காரணம்: ராகுல் காந்தி கடும் பாய்ச்சல் 



கொரோனா இரண்டாவது அலையால் ஏற்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் பிரதமர் மோடி ஒருவரே காரணம், என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பிரதமரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில், இன்று இணைய வாயிலாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு பிரதமர் மோடி ஒருவரே காரணம் என்றும், கொரோனா குறித்த தீவிரத்தை அவர் உணர்ந்திருக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும்,
"தடுப்பூசி ஒன்றே கொரோனாவுக்கு தீர்வு. சமூக இடைவெளி, ஊரடங்கு உள்ளிட்ட பிற கட்டுப்பாடுகள் தற்காலிகமானதே என்பதை தொடர்ந்து கூறி வருகிறேன். கொரோனா தடுப்பூசி திட்டம் சரியான உத்திகளுடன் செயல்படுத்தவில்லை என்றால், பல கொரோனா அலைகள் தாக்கும். தற்போதைய வேகத்தில் தடுப்பூசி பணி தொடர்ந்தால் 3, 4 என தொடர்ச்சியாக கொரோனா அலைகள் வரும்." 
"இந்த விவகாரம் நாட்டு மக்களின் உயிரைக் காப்பது தொடர்புடையதாகும், இதில் அரசியல் இல்லை, எதிர்க்கட்சிகள் வழிகாட்டுகின்றன . கொரோனா உருமாறிய நோயாக உள்ளது, இத்தொற்று குறித்த தன்மையை புரிந்து கொள்ளாமல் அரசு எதிர்க்கட்சிகளுடன் சண்டையிட்டு வருகிறது. இதுவரை 3% மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி உக்தியை மாற்றுங்கள், கொரோனா வைரஸ் பரவல், மற்றும் உருமாற்றத்துக்கு இடம் கொடுக்காதீர்கள் என அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்."
"கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே கொரோனா பரவல் குறித்து எச்சரித்தேன், ஆனால் எனது எச்சரிக்கையை பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை, இந்த கொரோனா பரவலுக்கு மத்திய அரசின் அறியாமையே காரணம். தற்போதைய தடுப்பூசி உக்தி நிச்சயம் 3வது அலைக்கு வழி வகுக்கும். கொரோனா வைரசின் உருமாற்றத்துக்கு காலம் கொடுக்காதீர்கள். அது மிகப்பெரிய பாதிப்பை விளைவிக்கும்." என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

 

Tags :

Share via