வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம்

by Editor / 28-01-2022 03:59:00pm
வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம்

செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் - 2 எதிரிகள் கைது - கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் - கைது செய்த செய்துங்கநகல்லூர் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு.

செந்தாமரைகண்ணன் (56), த/பெ. நாராயணன், கேடிசி நகர் பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் புதுக்குடி ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 16.01.2022 அன்று செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருநெல்வேலி வழ திருச்செந்தூர் மெயின்ரோடு பகுதியிலுள்ள கால்வாய் ஊரின் பாலத்திற்கு அருகில் இரவு வேலை முடித்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு செல்வதற்காக வந்து கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் வந்த கார் அவரை இடித்து விட்டு நிற்காகாமல் சென்றுவிட்டது. இதில் படுகாயமடைந்த மேற்படி செந்தாமரைகண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மேற்படி விபத்தில் இறந்த செந்தாமரை கண்ணனின் மகன் பிரதீப் (30) என்பவர் அளித்த புகாரின் பேரில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் விபத்து வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேற்படி விபத்து ஏற்படுத்திச் சென்ற காரை விரைந்து கண்டுபிடித்து, தீவிர விசாரணை மேற்கொள்ளுமாறு ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் அருள் தலைமையில் உதவி ஆய்வாளர் கருத்தையா மற்றும் காவலர்கள் ஆங்காங்கே உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்துக்கொண்டு பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டதில், ஃபோர்டு பியஸ்டா TN 04 AD 9686 என்ற மெருன் கலர் கார் என்பதும், மேற்படி காரில் 1) மகேஷ் (33), த/பெ. மந்திரம், வல்லநாடு 2) சுடலைமணி (29) த/பெ. சொரிமுத்து, கலியாவூர், 3)  ஜெகன் பாண்டியன், மூலிக்குளம், திருநெல்வேலி, 4) கந்தகுமார், பக்கப்பட்டி, 5) மார்த்தாண்டம், ஆகிய 5 பேரும் செந்தாமரைக் கண்ணனை கொலை செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் திட்டம்போட்டு கடந்த 16.01.2022 அன்று இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவரை வாகன விபத்தில் இறந்ததாக கருதவேண்டும் என்று அவர் மீது தங்களது காரை ஏற்றி கொலை செய்துவிட்டு நிற்காமல் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

மேற்படி எதிரிகளில் மகேஷ் மற்றும் சுடலைமணியை போலீசார் கைது செய்து, கொலைக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து  விசாரணை மேற்கொண்டதில் விபத்தில் கொலையுண்ட செந்தாமரைக் கண்ணன் சொந்த ஊர் நாசரேத் என்பதும், அவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஆலிவர் மகன் சாம்ராட் என்பவரது குடும்பத்தாருக்கும் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு நாசரேத்தில் நிலப்பிரச்சனை இருந்து வந்திருக்கிறது. இந்நிலையில் மேற்படி 5 எதிரிகளுடன் சாம்ராட் என்பவர் கோவாவிற்கு சுற்றுலா சென்றபோது கடந்த 04.01.2022 அன்று சாம்ராட் என்பவர் கோவாவில் ரயில் விபத்தில் மரணமடைந்துள்ளார். இதையறிந்த செந்தாமரைக் கண்ணன் சாம்ராட் இறந்தது குறித்து சமூக வலைதளங்களில் ‘இறைவனுடைய தண்டனை” என்று பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த 5 எதிரிகளும் செந்தாமரைக் கண்ணனை கொலை செய்து விட்டு தப்பிவிடுவதற்காக வாகன விபத்து நடந்தது போல காண்பித்து தங்களது காரை ஏற்றி கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மற்ற எதிரிகளை தேடி வருகின்றனர்.
 
வாகன விபத்தில் மரணமடைந்தது போல் காண்பித்து கொலை செய்ததை மிக நுட்பமாக விசாரணை மேற்கொண்டு ஆரம்பத்தில் வாகன விபத்து மரண வழக்காக பதிவு செய்யப்பட்டதை கொலை வழக்காக மாற்றம் செய்து எதிரிகளை கண்டுபிடித்து, அதில் 2 பேரைக் கைது செய்து, கொலைக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்த செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் அருள் தலைமையிலான போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார்  பாராட்டினார்.

இந்நிகழ்வின்போது ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் ஷாமளாதேவி, செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் அருள் உட்பட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.

 

Tags :

Share via