இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் நிலங்களின் உரிமை ஆவணங்கள் இணையத்தில் வெளியீடு!

by Editor / 09-06-2021 08:40:34am
இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள  கோயில்களின் நிலங்களின் உரிமை ஆவணங்கள் இணையத்தில் வெளியீடு!

இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களின் நிலங்களின் உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 3,44,647 ஏக்கர் கோவில் நிலம் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் சுமார் 36,000-க்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் உள்ளன. அவற்றுக்கு சொந்தமான நிலங்கள் 4,78,272 ஏக்கர். இந்நிலங்களின் உரிமை ஆவணங்களை சரிபார்க்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கோவில்களின் நில விவரங்கள் குறித்து இணையதளத்தில் வெளியிடப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார் . இதையடுத்து கோவில் நிலங்களின் தகவல்கள் இணையதளத்தில் பதிவு செய்யும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்றது .

தற்போது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நில விவரங்கள் https://hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியாகி உள்ளது . முதல் கட்டமாக 3,44,647 ஏக்கர் நிலம் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது . அடுத்தடுத்து இன்னும் கோவில்களின் நிலங்கள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் இணைக்கப்படும் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது .

நிலங்களின் ' அ ' பதிவேடு / நகர நில அளவைப் பதிவேடு மற்றும் சிட்டா ஆகியவற்றை பொதுமக்கள் பார்வையிடலாம் அல்லது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் கருத்துக்களை அல்லது கோரிக்கைகளைப் பொதுமக்கள் தெரிவிக்க விரும்பினால் 'கோரிக்கைகளைப் பதிவிடுக திட்டத்தின் கீழ் பதிவிடலாம்' என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via