3-வது அலை முடிவுக்கு வரும்: ராஜேஷ் தோபே

by Admin / 05-02-2022 11:02:42am
 3-வது அலை முடிவுக்கு வரும்: ராஜேஷ் தோபே


நாட்டிலேயே அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா 3-வது அலை தலைவிரித்தாடியது.
 
ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 48 ஆயிரம் பேர் தொற்றால் பதிக்கப்பட்டனர். இருப்பினும் 3-வது அலையின் போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும், இறப்பு விகிதமும் குறைவாகவே இருந்தது.

இதுமட்டும் இன்றி கடந்த சில நாட்களாக நோய் தொற்று பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. தற்போது தினசரி பாதிப்பு 15 ஆயிரமாக குறைந்துள்ளது.

குறிப்பாக முக்கிய நகரங்களான மும்பை, புனே, தானே மற்றும் ராய்காட் போன்ற இடங்களில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கொரோனா நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை மாநிலம் முழுவதும் குறைய தொடங்கி உள்ளது. எனவே கொரோனா 3-வது அலையின் பாதிப்பு வருகிற மார்ச் மாதம் 2-வது அல்லது 3-வது வாரத்தில் முழுமையாக குறையும் என கணித்துள்ளோம்.

இருப்பினும் கொரோனா தொற்று முற்றிலும் ஒழிக்க தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. நோய் தொற்றை கட்டுப்படுத்த 12 வயதில் இருந்து 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் செயல்முறையை மத்திய அரசு தொடங்க வேண்டும். இந்த வயதினருக்கு தடுப்பூசி போடுவதற்கான சுகாதார உள்கட்டமைப்புடன் மராட்டிய அரசு தயாராக உள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று குறைவதால் நோய் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் தொடர்ந்து குறைக்கப்படும்.

 

Tags :

Share via