ஒரே நாளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த 8425 பேரிடமிருந்து ரூ.43.35 லட்சம்  வசூல்

by Editor / 01-03-2022 06:07:02pm
ஒரே நாளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த  8425 பேரிடமிருந்து  ரூ.43.35 லட்சம்  வசூல்

ரயில்களில் அதிரடி பயணச்சீட்டு பரிசோதனையின்போது பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்வோர், பதிவு செய்யப்படாத உடமைகளை கொண்டு செல்வோர், வேறு ஒருவர் பெயரில் உள்ள பயணச்சீட்டில் பயணம் செய்வோர் ஆகியோர் பிடிபடுவது வழக்கம். மதுரை கோட்டத்தில் அனைத்து ரயில்களிலும் பயணச்சீட்டு பரிசோதகர்கள் ரகசியமாக திடீரென பயணச்சீட்டு பரிசோதனைகளை நடத்துவார்கள். இதுபோன்ற பரிசோதனைகளில் கடந்த ஆண்டு 2021 ஏப்ரல் மாதம் முதல் நடப்பாண்டு பிப்ரவரி 27 வரை மதுரை கோட்டத்தில் 1.37 லட்சம் பயணிகள் பிடிபட்டு, அவர்களிடமிருந்து அபராதமாக ரூபாய் 7.79 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதே காலத்தில் தெற்கு ரயில்வே அளவில் பயணச்சீட்டு இல்லாதவர்களிடம்  அபராதமாக ரூபாய் 83.99 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 22.9 சதவீதம் அதிகமாகும். சென்னை கோட்டத்தில் 6.33 லட்சம் பயணச்சீட்டு இல்லாத பயணிகளிடம் அபராதமாக ரூபாய் 29.86 கோடியும், திருவனந்தபுரம் கோட்டத்தில் 3.10 லட்சம் பயணச்சீட்டு இல்லாத பயணிகளிடம் அபராதமாக ரூபாய் 16.53 கோடியும், பாலக்காடு கோட்டத்தில் 2.70 லட்சம் பயணச்சீட்டு இல்லாத பயணிகளிடம் அபராதமாக ரூ 14.15 கோடியும்,  சேலம் கோட்டத்தில் 1.69 லட்சம் பயணச்சீட்டு இல்லாத பயணிகளிடன் அபராதமாக ரூபாய் 9.61 கோடியும்,  திருச்சி கோட்டத்தில் 1.12 லட்சம் பயணச்சீட்டு இல்லாத பயணிகளிடம் அபராதமாக ரூபாய் 6.02 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த பிப்ரவரி மாதம் மட்டும் பயணச்சீட்டு இல்லாத  பயணிகளிடம்  தெற்கு ரயில்வே அளவில் அபராதமாக ரூபாய் 9.15 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 32.8 சதவீதம் அதிகமாகும். மேலும் பிப்ரவரி மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை (27.02.2022) அன்று மட்டும் ஒரே நாளில் அதிகப்படியாக பயணச்சீட்டு இல்லாத 8425 பேர் பிடிபட்டு ரூபாய் 43.35 லட்சம்  அபராதம் செலுத்தியுள்ளனர். எனவே பயணிகள் ரயிலில் உரிய பயணச் சீட்டு மற்றும் புகைப்பட அடையாள அட்டையுடன் பயணம் செய்வதோடு அனுமதிக்கப்பட்ட அளவில் உடைமைகளை எடுத்துச் செல்லுமாறு தெற்கு ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

Tags : Rs 43.35 lakh collected from 8425 people who traveled without a ticket in a single day

Share via