புதிய தொழில்நுட்பங்களை கொண்டுவர முயற்சிக்க வேண்டும் பிரதமர் மோடி பேச்சு
மத்திய பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளை திறம்பட நடை முறைப்படுத்த பல்வேறு துறைகளுக்கும் உதவும் வகையில் மத்திய அரசு தொடர் இணையவழி கருத்தரங்கங்களை நடத்தி வருகிறது.
மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் அறிவியல் சார்ந்த மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் இணைந்து ‘தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சி’ என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கை இன்று தொடங்கியது.
கருத்தரங்கின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தொழில்நுட்பத்தால் இயக்கப்பட்ட வளர்ச்சி என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது.
விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் தனிமைப்படுத்தப்பட்ட துறை அல்ல. ஏனென்றால் இது டிஜிட்டல் பொருளாதாரத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. மேம்பட்ட தொழில் நுட்பத்தை அடிப்படையாக கொண்டது. இது இப்போது விரைவான வினியோகம் மற்றும் குடிமக்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
5ஜி தொழில்நுட்ப வளர்ச்சியை செயல்படுத்தி வேலைவாய்ப்புகளை வழங்க முடியும். 2022-23-ம் ஆண்டுக்குள் 5ஜி மொபைல் சேவைகளை வெளியிடுவதற்கு தேவையான அலைக்கற்றை ஏலங்கள் இந்த ஆண்டு நடத்தப்படும்.
உள்கட்டமைப்பு முன்னேற்றம் என்பது தொழில்நுட்பத்துடன் தொடர்புடையது. பொது வினியோக அமைப்புகள் டிஜிட்டல் தளமுடன் இணைக்கப்படுகிறது.
தன்னம்பிக்கை இந்தியாவை உருவாக்குவதில் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கும். தகவல் தொடர்புத் துறையில் புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும்.
நமக்கான தொழில்நுட்பம் சாமானிய மனிதனை மேம்படுத்துவதற்கான மற்றும் இந்தியாவை தன்னிறைவாக மாற்றுவதற்கான வலுவான அடித்தளம். அமெரிக்க அதிபர் இன்று உரையாற்றிய போது ‘மேக் இன் அமெரிக்கா’ குறித்து வலியுறுத்தினார். அதுபோல் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திலும் இந்தியா தன்னிறைவு பெறுவது அவசியம்.
வலுவான தரவு, பாதுகாப்பு கட்டமைப்பு மிகவும் அவசியம். தகவல் தொடர்புத் துறையில் புதிய பாதுகாப்பு கோணங்கள் இணைந்துள்ளன. பட்ஜெட் டில் சூரிய சக்தி துறைகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
Tags :