தமிழ்நாட்டில் 36 மாவட்டங்களில் ரயில் நெட் சேவை

by Editor / 02-03-2022 09:25:02pm
தமிழ்நாட்டில்  36 மாவட்டங்களில் ரயில் நெட் சேவை

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ரயில் டெல் நிறுவனம் மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது. இந்த 'மினி ரத்னா' நிறுவனம் இந்தியாவில் பெரிய நடுநிலையான தொலைத் தொடர்பு கட்டமைப்பு வாயிலாக நகரங்களையும் கிராமங்களையும் இணைக்கிறது. ரயில் பாதைகள் செல்லுமிடமெல்லாம் 60000 கிமீ தூரத்திற்கு வலுவான நம்பகமான தொலைத்தொடர்பு இணைப்புகளை வைத்திருக்கிறது. இந்திய அரசு முக்கிய தொலைத்தொடர்பு பணிகளுக்கு இந்த நிறுவனத்தை நம்பிக்கையாக கொண்டுள்ளது. இந்த நிறுவனம் ஆறாயிரத்திற்கும் அதிகமான ரயில் நிலையங்களில் இலவச இணையதள சேவை வழங்கும் ஒப்பற்ற பணியையும் செய்து வருகிறது. இந்த நிறுவனம் ரயில்வே தொலைதொடர்பு சம்பந்தப்பட்ட பணிகளையும் கவனித்து வருகிறது.  மேலும் இந்த நிறுவனம் 'ரயில் வயர்' எனும் நம்பகமான பாதுகாப்பான இணையதள சேவையை குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் தமிழகத்தில் வீடுகளுக்கு வழங்கப்படும் இணையதள சேவையில் ஒரு லட்சம் தொடரிழை இணைப்புகளை வழங்கி சாதனை புரிந்துள்ளது. இதில் 50 சதவீத இணைப்புகள் கம்பிஇழை தொடர்பில்லாத  குக்கிராம பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. ரயில் வயரின் சேவை தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களில்   36 மாவட்டங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த வசதி சாத்தியம் இல்லாத கிராமப் பகுதிகளுக்கும் கூட சேவை வழங்கப்பட்டு வருகிறது. கிராம பகுதிகளுக்கு இணையதள சேவையை வழங்குவதன் மூலம் மின்னணு பணப்பரிமாற்றம், தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் மக்களுடைய வாழ்க்கைத் தரம் உயர்வு போன்ற பயன்பாடுகள் ஏற்படுகின்றன. இந்த சிறந்த இணையதள சேவை மூலம் மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் மற்றும் இணைய மேலாண்மை, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, நிதி போன்ற துறைகளிலும் புதிய வாய்ப்புகளை கிராம மக்கள் பெற முடிகிறது. தற்போது ரயில் வயர் இணையதள சேவையை தேசிய அளவில் 4.6 லட்சம் இணையதள சந்தாதாரர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.  இதில் 50 சதவீதம் கிராமப்புற சந்தாதாரர்கள் ஆவார்கள். இந்த இணையதள சேவை மூலம் கிராமங்களில் உள்ள குறு தொழில் முனைவோர் பொது சேவை மையங்கள் உருவாக்குகின்றனர். இதன் மூலம் ரயில் விமானம் மற்றும் பேருந்து பயண சீட்டு பதிவது, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, அலைபேசி சந்தா செலுத்துவது, மின்சார கட்டணம் செலுத்துவது, வருமானவரி அடையாள அட்டை, வருமான வரி கட்டுவது, வங்கி பரிவர்த்தனை, காப்பீடு போன்ற சேவைகள் வழங்க வாய்ப்பளிக்கிறது. சமீபத்தில் மதுரை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நகரங்களில் ரயில் வயர் பயனாளர் சந்திப்புகள் நடைபெற்றன. பயனாளர்கள் மேலும் அதிக மதிப்புக் கூட்டு சேவைகளை வழங்கும் படி வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து ரயில்டெல் நிர்வாக இயக்குனர் புனீத் சாவ்லா கூறும்போது 'ரயில் வயர்' வழங்கும் இணையதள சேவை இந்திய கிராமப்புற பகுதிகளில் தொழில் வளர்ச்சிக்கு வெகுவாக உதவுகிறது என்றார். மேலும் இந்த இணையதள சேவை கிராம மற்றும் நகர்ப்புற மக்களை மின்னணு பரிமாற்றம் வாயிலாக இணைத்து கிராமப்பகுதிகளின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது என்றார்.

 

Tags : Rail Net service in 36 districts of Tamil Nadu

Share via