22 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை வானிலை ஆய்வு மையம் தகவல்

by Editor / 20-10-2021 04:10:11pm
22 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை வானிலை ஆய்வு மையம் தகவல்


தமிழகத்தில் 22 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்றும், வரும் 26 ந்தேதி வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து தென் மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தென்‌ தமிழ்நாட்டில்‌ (1 கிலோ மீட்டர்‌ உயரம் வரை ) நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம்‌, ஈரோடு, நாமக்கல்‌, திருப்பூர்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, மதுரை, விருதுநகர்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கரூர்‌, திருச்‌சிராப்பள்ளி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அனேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்‌சி மலையை ஓட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய உள்‌ மாவட்டங்கள்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, திருப்பத்தூர்‌, நாமக்கல்‌, ஈரோடு மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய தென்‌ கடலோர மாவட்டங்கள்‌, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அனேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழை பெய்ய கூடும்‌.


கடந்த 24 மணி நேரத்தில்‌ பதிவான மழை அளவு விவரம் வருமாறு:
சோழவந்தான்‌, சாத்தான்குளம்‌, பென்னாகரம்‌ தலா 6 செ.மீ., ஏற்காடு, பெலாந்துறை, தழுத்தலை, தஞ்சை, பாபநாசம்‌ தலா 4 செ.மீ. வத்திராயிருப்பு, உசிலம்பட்டி, ஜெயம்கொண்டம்‌, விழுப்புரம்‌, சிங்கோனா தலா 3 செ.மீ., ஊத்தங்கரை, கடம்பூர்‌, திண்டிவனம்‌, கூடலூர்‌, வீரகனூர்‌, எடப்பாடி, புதுச்சத்திரம்‌ தலா 2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.வங்கக்‌ கடல்‌ மற்றும்‌ தென்னிந்திய பகுதிகளில்‌ வளிமண்டலத்தின்‌ கீழ்‌ அடுக்கில்‌ அக்டோபர்‌ 26 ந்தேதி முதல்‌ வடகிழக்கு பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல்‌ நிலவுகிறது. இந்நிலையில்‌ தென்மேற்கு பருவமழை இந்தியப்‌ பகுதிகளில்‌ இருந்து விலகி வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில்‌ எதிர்வரும்‌ அக்டோபர்‌ 26 ந்தேதியை ஓட்டி துவங்குவதற்கான சாதகமான சூழல்‌ நிலவுகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via