சட்டசபை காங்., தலைவராக கிள்ளியூர் ராஜேஷ்குமார் செயல்படுவார்! -காங்கிரஸ் கட்சி தகவல்

by Editor / 18-05-2021 09:16:52am
சட்டசபை காங்., தலைவராக கிள்ளியூர் ராஜேஷ்குமார்  செயல்படுவார்! -காங்கிரஸ் கட்சி தகவல்

சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு, நேற்று நடந்த ஓட்டெடுப்பில், 12 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு, கிள்ளியூர் எம்.எல்.ஏ., ராஜேஷ்குமாருக்கு கிடைத்துள்ளதால், அவர் சட்டசபை தலைவராக தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது என, அக்கட்சி வட்டாரங்கள் கூறின.தமிழக காங்கிரஸ் கட்சிக்கு, 18 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு, எம்.எல்.ஏ.,க்கள் விஜயதாரணி, செல்வப்பெருந்தகை, ராஜேஷ்குமார், பிரின்ஸ், முனிரத்தினம் ஆகியோர் மத்தியில் போட்டி நிலவியது. இதையடுத்து, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தலைமையில், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, புதுச்சேரி எம்.பி., வைத்தியலிங்கம், மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோரின் முன்னிலையில், சத்தியமூர்த்தி பவனில், நேற்று எம்.எல்.ஏ.,க்களிடம் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. ஓட்டெடுப்பு முடிவுக்கு பின், தனி விமானத்தில் மல்லிகார்ஜுன கார்கே, தினேஷ் குண்டுராவ் நேற்று பெங்களூரு சென்றனர்.கார்கே இன்று கேரளா செல்கிறார். அவரது முன்னிலையில், கேரள சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. பின், இரண்டு மாநிலங்களின் சட்டசபை தலைவர் தேர்தல் முடிவை, காங்., தலைவர் சோனியாவிடம், கார்கே தெரிவிப்பார். அவர் முறைப்படி அறிவிப்பார் என, கூறப்படுகிறது.இதற்கிடையில், தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு, 12 எம்.எல்.ஏ.,க்கள், ராஜேஷ்குமாருக்கு ஆதரவாக ஓட்டு அளித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. எனவே, சட்டசபை காங்கிரஸ் தலைவராக ராஜேஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via