தேர்வு கட்டணம் செலுத்தாவிட்டால் தனியார் கல்லூரிகளுக்கான இணைப்பு ரத்து:!
சில தனியார் கல்லூரிகள், மாணவர்களின் தேர்வு கட்டணத்தை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு செலுத்தவில்லை என்றும் திங்கட்கிழமைக்குள் செலுத்தாவிட்டால் கல்லூரிகளுக்கான இணைப்பு ரத்து செய்யப்படும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்,
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த காலங்களில் கல்வித்துறையில் குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் நடைப்பெற்ற முறைகேடு தொடர்பாக அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தியதாகவும், மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட தேர்வுக் கட்டணத்தை, 23 தனியார் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்திடம் செலுத்தாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், 23 கல்லூரிகளும் வரும் திங்கள்கிழமைக்குள் கட்டணத்தைக் கட்ட வேண்டும் என்ற அவர், இல்லையெனில் கல்லூரிக்கான இணைப்பு ரத்து செய்யப்படும் எனவும் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்தப்பட மாட்டாது எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் நிரந்தரமாக்க பணம் வாங்கப்படும் புகார்களும் வந்திருப்பதாகக் கூறிய அவர், கடந்த காலங்களில் கவுரவ விரிவுரையாளர்கள் நியமனத்திற்கு குழு அமைத்து பணி நியமனங்கள் நடைப்பெற்றதாகவும், பல்வேறு முறைகேடுகள் நடைப்பெறுவதாக புகார்கள் வந்ததன் அடிப்படையில் அந்த குழு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பணம் அளித்து யாரும் ஏமாற வேண்டாம் என்றும், போலி பணம் பெறும் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். கவுரவ விரிவுரையாளர்களை முறைப்படுத்தி நியமனம் செய்ய உள்ளதாக கூறிய அவர், முன்னுரிமை அடிப்படையில் மட்டுமே நியமனம் நடைப்பெறும் எனவும் உறுதிப்பட கூறினார்.
புதிய கல்வி கொள்கை என்பது மாநில உரிமைகளின் தலையீடு என கூறிய அவர், எனவேதான் அதை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருவதாகவும், தமிழகத்தில் புதிய கல்வி கொள்கை நுழையாமல் இருக்க துறை சார்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
பொறியியல் மாணவர்களுக்கான மறு தேர்விற்கான அட்டவணை விரைவில் வெளியாகும் என்று தெரிவித்த அவர், சூரப்பா மீதான விசாரணைக்காக குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அறிக்கை தாக்கல் செய்த பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
Tags :