ஈரோடு கிழக்கு  தொகுதியில் பணப்பட்டுவாடா -தேமுதிக புகார்.

by Editor / 04-02-2023 03:16:13pm
ஈரோடு கிழக்கு  தொகுதியில் பணப்பட்டுவாடா -தேமுதிக புகார்.

ஈரோடு கிழக்கு  தொகுதியில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரிடம் தேமுதிக புகார்அளித்துள்ளது:


இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பளார்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.


அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசுவை  வேட்பாளராக அறிவித்தார். ஓபிஎஸ் அணியில் அவரது தீவிர விசுவாசியான செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இரண்டு அணிகளாக பிரிந்து போட்டியிடுவதால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தொடர்பாக தலைமைச்செயலகத்தில், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகுவிடம் புகார் அளித்த பின் தேமுதிக வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஜனார்த்தனன்  தெரிவித்ததாவது..

”ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக பணப்பட்டுவாடா செய்து வருவது குறித்து மாநில தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளோம். ஒட்டுமொத்த அமைச்சர்களும் அந்த தொகுதியில் திரண்டு, எல்லா இடங்களிலும் எல்லாவிதமான முறைகேடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

நாங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் ஆதாரங்களை தலைமை தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துள்ளோம். அமைச்சர்கள் கார்களில் கொடி காட்டியவாறு தொகுதியில் வலம் வருகின்றனர்.

பட்டுவாடா தொடர்பான ஆடியோவையும் தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துள்ளோம்.
அங்கு இருக்கின்ற அனைத்து அதிகாரிகள், மாவட்டத்தினுடைய ஆட்சியரையும் மாற்ற வேண்டும்.” என ஜனார்த்தனன் தெரிவித்தார்.

 

Tags :

Share via