இந்தியாவில் போலி கோவிஷீல்ட் தடுப்பூசிகள் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
இநந்தியாவில் போலியான கோவிஷீல்ட் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இது மனித உயிருக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, இந்தியா முழுவதும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படக் கூடிய கோவிஷீல்ட் தடுப்பூசியில், போலி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் பயன்படுத்தப்படும் 2 மில்லி லிட்டர் அதாவது நான்கு டோஸ் கொண்ட கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகள் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளதாகவும், கோவிஷீல்ட் தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் 2 மில்லி லிட்டர் கொண்ட குப்பிகளை உற்பத்தி செய்வதில்லை எனவும் கூறியுள்ளது. இந்த போலியான கோவிஷீல்ட் தடுப்பூசிகள் மனித உயிருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், ஆப்பிரிக்க நாடான உகண்டாவில் ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி காலாவதி என குறிப்பிட்டுள்ள தடுப்பு மருந்துகள் போலியானது எனவும், போலி கோவிஷீல்ட் மருந்துகளை கண்டுபிடித்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. மேலும் போலி மருந்துகள் குறித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை என்றாலும், சுகாதார அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags :