பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1.20 லட்சம் திருட்டு

by Editor / 24-04-2022 07:54:00am
பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1.20 லட்சம் திருட்டு

ஆத்தூர் கடைவீதி சாத்தனார் தெருவில் வசித்து வருபவர் சேகர் (வயது 53), நகை பட்டறை உரிமையாளர். இவருடைய மனைவி மங்கையர்க்கரசி (48). இவரும், அதே பகுதியை சேர்ந்த துணிக்கடை உரிமையாளரான ஹசீனா என்பவரும் நேற்று மதியம் ஆத்தூர் காமராஜர் ரோட்டில் உள்ள வங்கியில் இருந்து மகளிர் சுய உதவிக்குழு கடன் தொகை ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தைபெற்றனர்.

பின்னர் அதை ஒரு பையில் எடுத்து கொண்டு ஸ்கூட்டியில் தங்களது வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். அந்த வாகனத்தை ஹசீனா ஓட்டினார். பணப்பையுடன் மங்கையர்க்கரசி பின் சீட்டில் அமர்ந்து இருந்தார்.

கடைவீதி பகுதியில் சென்றபோது மங்கையர்க்்கரசியின் முதுகில் திடீரென அரிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக ஹசீனாவின் துணிக்கடைக்கு சென்று முதுகில் ஏற்பட்ட அரிப்பு என்னவென்று பார்க்கும்போது கையில் இருந்த பணப்பை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அப்போது தான் உடலில் அரிப்பை ஏற்படுத்தும் ரசாயன பவுடரை தூவி மங்கையர்க்கரசியின் கவனத்தை திசை திருப்பிய மர்ம நபர்கள் பணப்பையை திருடிச்சென்றது தெரியவந்தது.

இந்த நூதன திருட்டு குறித்து, மங்கையர்க்கரசி ஆத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் நூதனமுறையில் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

 

Tags :

Share via