25 லட்சம் மோசடி பெரியார் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியின் கணவர் கைது

by Editor / 24-04-2022 07:57:52am
25 லட்சம் மோசடி பெரியார் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியின் கணவர் கைது

சேலம் சூரமங்கலம் அருகே உள்ள ஜாகீர்ரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் திருவேங்கடம் (வயது 52), கட்டிட காண்டிராக்டர். இவருடைய மகன் பிரசன்னாவுக்கும், நெல்லையை சேர்ந்த பவித்ரா என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் இருவரும் பிரிந்தனர். பவித்ரா நெல்லையில் வசித்து வருகிறார். ஈரோட்டை சேர்ந்தவர் மணிவண்ணன் (52), மின்வாரிய காண்டிராக்டர். அவருடைய மனைவி லீலா. இவர் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

மணிவண்ணனும், திருவேங்கடமும் நண்பர்கள் ஆவர். இந்த நிலையில் மணிவண்ணன், லீலா ஆகியோர் பவித்ராவிடம் பேசி சமாதானம் செய்வதாக திருவேங்கடத்திடம் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்கள் சமாதானம் பேசி விட்டதாகவும், ரூ.25 லட்சம் கொடுத்தால் விவாகரத்து தந்துவிடுவதாக பவித்ரா தெரிவித்ததாகவும் திருவேங்கடத்திடம் கூறினர். அதைத்தொடர்ந்து அவர் ரூ.25 லட்சத்தை மணிவண்ணனிடம் கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட அவர் அந்த பணத்தை பவித்ராவிடம் கொடுத்துவிட்டேன் என்று நண்பரிடம் கூறி உள்ளார். இதற்கிடையில் பவித்ரா, கணவர் பிரசன்னா மீது வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக நெல்லை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பிறகு தான் தங்களிடம் வாங்கிய ரூ.25 லட்சத்தை மருமகளிடம் கொடுக்காமல் மணிவண்ணன் தம்பதி ஏமாற்றியது தெரியவந்தது. இந்த மோசடி குறித்து திருவேங்கடம் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி பெரியார் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி லீலா மற்றும் அவரது கணவர் மணிவண்ணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் மணிவண்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். லீலாவை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via