நேபாளத்தில் நாடாளுமன்றம் கலைப்பு!

by Editor / 22-05-2021 11:16:44am
நேபாளத்தில் நாடாளுமன்றம் கலைப்பு!

நேபாளத்தில் நாடாளுமன்றத்தை கலைத்து ஆறு மாதங்களில் புதிய தேர்தலுக்கு குடியரசுத் தலைவர் வித்யாதேவி பண்டாரி உத்தரவிட்டுள்ளார். நேபாளத்தில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பிரதமா் சா்மா ஓலி மற்றும் முன்னாள் பிரதமா் புஷ்ப கமல் தாஹா இடையே மோதல் அதிகரித்தது. அரசியல் குழப்பம் அதிகரித்த நிலையில், நாடாளுமன்றத்தில் அண்மையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் பிரதமா் சா்மா ஓலி அரசு தோல்வியடைந்தது. அதனைத் தொடா்ந்து அவா் பிரதமா் பதவியை ராஜிநாமா செய்தாா்.

புதிய ஆட்சியமைக்க எதிா்க்கட்சியான நேபாள காங்கிரஸ் முயற்சித்தது. அந்தக் கட்சியால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதையடுத்து, 275 உறுப்பினா்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினா்களை (121) கொண்ட கட்சி என்ற முறையில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிபா் வித்யாதேவி பண்டாரி அழைப்பு விடுத்தாா். அதையேற்று பிரதமராக சா்மா ஓலி மீண்டும் கடந்த 14-ஆம் தேதி பதவியேற்றாா். அவா் 30 நாள்களுக்குள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க அதிபா் உத்தரவிட்டாா். பெரும்பான்மையை நிரூபிக்க சா்மா ஓலிக்கு 136 உறுப்பினா்கள்ஆதரவு தேவை.

இந்தச் சூழலில், பிரதமா் சா்மா ஓலியின் பரிந்துரையின் பேரில் புதிய அரசை அமைக்க வெள்ளிக்கிழமை மாலை 5 மணி வரை அதிபா் காலக்கெடு நிா்ணயித்தாா்.

இதையடுத்து தனது ஆட்சியைத் தக்கவைக்க தீவிரமாக செயல்பட்டு வந்த கே.பி.சா்மா ஓலி, அதிருப்தி குழுவினரை சமாதானப்படுத்த 10 போ கொண்ட குழுவை அமைத்தார். சா்மா ஓலி தனது கட்சியில் உள்ள அதிருப்தியாளா் அந்த குழுவின் தலைவா் மாதவ் குமாா் நேபாளை கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இதனிடையே வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சா்கள் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு, அதிபா் அலுவலகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான மீண்டுமொரு வாக்கெடுப்பை நடத்த பிரதமா் விரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருப்பதாக அதிபா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, நாடாளுமன்ற மேலவைக்கு வியாழக்கிழமை நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஆளும் கட்சி வேட்பாளா் தோல்வியடைந்தாா். அதுபோல, உள்துறை அமைச்சா் ராம் பகதூா் தாபாவும், எதிா்க்கட்சி வேட்பாளா் கிம் லால் தேவ்குட்டாவிடம் தோல்வியடைந்தாா். இவா்களின் தோல்வி, நாடாளுமன்றத்தில் சா்மா ஓலி பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதை தெளிவாக காட்டியது. அதனைத் தொடா்ந்து, நேபாளத்தில் புதிய அரசை அமைக்க அரசியல் கட்சிகளுக்கு அதிபா் வியாழக்கிழமை புதிதாக அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், நேபாளத்தில் நாடாளுமன்றத்தை வெள்ளிக்கிழமை நள்ளிரவு கலைத்து ஆறு மாதங்களில் புதிய தேர்தல் நடத்த உத்தரவிட்டார் குடியரசுத் தலைவர் வித்யாதேவி பண்டாரி. பிரதமர் சா்மா ஓலி தலைமையிலான அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை இல்லாததால் ஷர்மா ஒலி, ஷேர் பகதூர் ஆகியோர் ஆட்சியமைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், நேபாள நாடாளுமன்றத்துக்கு நவம்பர் 12,18 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

Tags :

Share via