ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்; கேரளா
காசர்கோடு மாவட்டம் செருவத்தூரில் மக்கள் அதிகம் வந்துசெல்லும் பேருந்து நிலையம் அருகே உள்ளது ஐடியல் ஸ்னாக்ஸ் என்ற உணவகம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்துக்காக காத்திருக்கும்போது இந்த உணவகத்தில் சாப்பிடுவது வழக்கம்.
அந்த வகையில், இரு தினங்களுக்கு முன் இங்கு ஷவர்மா சாப்பிட்ட சுமார் 15 பள்ளி மாணவர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. ஷவர்மாதான் அவர்களுக்கு ஃபுட் பாய்சனாக மாறியதாகவும், அதனாலேயே அனைவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் கேரள சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.
இவர்களில் 14 மாணவர்கள் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றுமொரு மாணவியான தேவநந்தா என்ற பள்ளி மாணவி மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சிகிச்சை பெற்று வரும் மற்றவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவகத்துக்கு சென்று மாதிரிகளையும் சேகரித்துள்ளனர். சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வுசெய்த கேரள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அதற்கு சீல் வைத்தனர்.
மேற்கட்ட விசாரணைக்கு சுகாதார அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேற்கொண்டு கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
Tags :