மதுரை அருகே சுங்கச்சாவடியில் வாகன உரிமையாளரை தாக்கிய  டோல்கேட் ஊழியர்கள்

by Editor / 23-05-2021 05:26:11pm
மதுரை அருகே சுங்கச்சாவடியில் வாகன உரிமையாளரை தாக்கிய  டோல்கேட் ஊழியர்கள்



மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் சுங்கக்கட்டணம் செலுத்த மறுப்பு தெரிவித்த உள்ளூரை சேர்ந்த வாகன உரிமையாளரை டோல்கேட் ஊழியர்கள் தாக்கியதால் மோதல் ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த பத்மநாபன் தனது குடும்பத்தினருடன் மதுரையில் இருந்து திருமங்கலம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடிக்கு வந்தபோது டோல்கேட் ஊழியர்கள் அவர் காரை தடுத்து நிறுத்தி கட்டணம் செலுத்தும்படி கூறியுள்ளனர். தான் திருமங்கலத்தில்தான் வசிப்பதாகவும் உள்ளூரை சேர்ந்தவர்கள் சுங்கக் கட்டணம் செலுத்த தேவை இல்லை என்பதால் கட்டணம் செலுத்த முடியாது என பத்மநாபன் தெரிவித்துள்ளார். அதற்கு டோல்கேட் ஊழியர்கள், வாகனம் சென்னை பதிவு எண் கொண்டதாக உள்ளதால் அதற்குரிய ஆதாரத்தை காண்பித்து வாகனத்தை எடுத்துச் செல்லும்படி கூறினர். அதற்கு வாகன உரிமையாளர் தான் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் தான் என்பதற்கான ஆதாரத்தை காண்பித்ததாகவும் இதனை ஏற்க மறுத்ததால் டோல்கேட் ஊழியர்களிடம் அவர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இருதரப்புக்கும் இடையேயான மோதல் கைகலப்பாக மாறியது. இதில் , டோல்கேட் ஊழியர்கள் தாக்கியதில் பத்மநாபனுக்கு கை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பத்மநாபன் டோல்கேட் வசூல் மையத்தில் உள்ள கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு காவல்நிலையத்தில் புகார் அளிக்கும்படி தெரிவித்தனர் இதனையடுத்து பத்மநாபன் தன்னை தாக்கிய டோல்கேட் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் திருமங்கலம் நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமங்கலம் நகர் பகுதியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சுங்கச்சாவடி அமைந்துள்ளதால் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவையும் மீறி அடிக்கடி உள்ளூர் வாகனங்களுக்கு டோல்கேட் ஊழியர்கள் கட்டணம் செலுத்த கூறுவதால் இத்தகைய சர்ச்சைகள் நடைபெறுவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

Tags :

Share via